search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    மூதாட்டியிடம் 21 பவுன் நகைகள் மோசடி: கணவன், மனைவி மீது வழக்கு

    வங்கி லாக்கரில் வைப்பதற்காக மூதாட்டி கொடுத்த 21 பவுன் நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் சுனாமி குடியிருப்பு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செங்கோல்மேரி (வயது 65). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகள் சிங்கப்பூரில் உள்ளார். மாதந்தோறும் செலவுக்கு அனுப்பும் பணத்தை சிறுக சிறுக சேமித்து 21 பவுன் நகைகளை மூதாட்டி சேர்த்து வைத்திருந்தார்.

    வீட்டில் தனியாக இருப்பதால் நகைக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய மூதாட்டி, நகைகளை வங்கி லாக்கரில் வைக்க விரும்பினார். இதற்காக அப்பகுதியில் உள்ள ஏலச்சீட்டு நடத்தி வரும் சக்திவேல், அவருடைய மனைவி செல்லம்மாள் ராஜேஸ்வரியின் உதவியை நாடினார். அவர்கள் மூதாட்டியிடம் 21 பவுன் நகைகளை வாங்கிச்சென்று, வங்கி லாக்கரில் வைத்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், வங்கி லாக்கரில் உள்ள நகைகளை பார்க்க விரும்புவதாக மூதாட்டி செங்கோல்மேரி சக்திவேலிடம் தெரிவித்தார். ஆனால் கணவன், மனைவி இருவரும் மூதாட்டியை வங்கிக்கு அழைத்துச்செல்லாமல், அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர்.

    இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த செங்கோல்மேரி, அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, சக்திவேல், அவரது மனைவி செல்லம்மாள் ராஜேஸ்வரி ஆகியோர் நகைகளை வங்கி லாக்கரில் வைக்காமல், அடமானம் வைத்து, பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

    இதுபற்றி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் செங்கோல்மேரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து, சக்திவேல், செல்லம்மாள் ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள், கொரோனா பரிசோதனை செய்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பரிசோதனை முடிவுக்கு பின் தம்பதி மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மூதாட்டியிடம் வங்கி லாக்கரில் நகைகளை வைப்பதாக கூறி, அடமானம் வைத்து மோசடியில் தம்பதி ஈடுபட்ட சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×