search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை
    X
    கொரோனா தடுப்பு நடவடிக்கை

    அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

    அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரும், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 348 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தினமும் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்கள் போலவே, நேற்று யாரும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படாததால் அரியலூர் மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஏற்கனவே 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 25 பேர் குணமடைந்ததால் அவர்கள் நேற்று வீடு திரும்பினர். முன்னதாக அவர்களுக்கு சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, மருத்துவ நலப்பணிகளின் இணை இயக்குனர் (பொறுப்பு) திருமால், பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அதிகாரி ராஜா, டாக்டர் அன்பரசு, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், பெரம்பலூர் வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், வி.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் சுகாதாரத்துறையினர், மருத்துவக்குழுவினர் பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 49 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 7 கர்ப்பிணிகள் உள்பட மொத்தம் 27 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பெரம்பலூருக்கு வந்த 56 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 348 பேரில், 327 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 21 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 30 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×