search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    பெரம்பலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - சுகாதாரத்துறை தகவல்

    பெரம்பலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன், வி.களத்தூரை சேர்ந்த வாலிபர், வி.களத்தூர் போலீஸ் நிலைய ஏட்டு என 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 672 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 150 பேரின் ஆய்வு முடிவுகள் இதுவரை வந்துள்ளது. மீதமுள்ள 522 பேரின் ஆய்வு முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

    போலீசார் தடுப்பு ஏற்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்துள்ள காட்சி.

    இதற்கிடையில் குரும்பலூர் பாளையம் கிராமத்தில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்தந்தப்பகுதியிலேயே மருத்துவக்குழுவினர் மூலம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 4 நாட்களாக இரு கிராமங்களிலும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் வீடு வீடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

    வி.களத்தூர் மற்றும் பாளையம் கிராமத்திற்கு வெளியூர் மக்கள் ஊருக்குள் நுழையவும், ஊரில் இருப்பவர்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வி.களத்தூர், பாளையம் கிராமத்திற்கு செல்ல தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு சாலைகள் ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் எதிர் எதிர் திசைகளில் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் செல்ல தடைசெய்துள்ளனர். அந்த கிராமங்களுக்கு பால், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிட மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்து வருகிறது.

    கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட போலீஸ் ஏட்டுவுடன் தொடர்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் மற்றும் 7 ஊர்க்காவல் படையினர் மொத்தம் 24 பேரையும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்ட அரசு மருத்துவமனையில் உடனே அனுமதித்தது. அந்த 24 பேரும் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று குறித்த ஆய்வு முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள 120 ரேபிட் கிட்டுகளை கொண்டு, அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக தொற்று ஏதும் ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வு அறிக்கை வந்துள்ளதால், பொது சுகாதாரத்துறையினரும், மாவட்ட போலீஸ் நிர்வாகமும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    இருப்பினும் 24 பேரும் தனிமையில் உள்ளனர். எவரையும் வெளியே விட அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு சரியான உணவு குடிநீர் அடிப்படை வசதிகள் போன்றவை இல்லை என புகார்கள் எழுந்துள்ளன. மேலும் அவர்களுடன் பரிசோதனை செய்யப்பட்ட மற்ற துறையை சேர்ந்தவர்களும் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மற்றதுறையை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தப்படவில்லை என்று கூறியும், இதனால் பாதுகாப்பற்ற நிலையில் தாங்கள் உள்ளதாகவும், மாவட்ட கலெக்டரும், சுகாதாரத்துறையினரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மற்றதுறையை சேர்ந்த ஊழியர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்ய மாவட்ட போலீஸ் நிர்வாகம், மாவட்ட சுகாதார துறை மூலம் ஏற்பாடு செய்தது. இந்த முகாம், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என சுமார் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான போலீஸ் ஏட்டுவின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் அவரது குடும்பத்தினர் 12 பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும், அந்த ஏட்டுவிற்கு மருத்துவ சிகிச்சை அளித்த ஆத்தூரை சேர்ந்த தனியார் டாக்டர் மற்றும் நாவக்குறிச்சி கிராமத்தில் உள்ள அவரது உறவினர்கள் என 41 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×