search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்- புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது
    X

    தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்- புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது

    அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. #BusStrike
    புதுச்சேரி:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமையை பறிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

    புதுவையில் ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எல்.பி.எப்., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், அரசு சார்பு நிறுவன ஊழியர் சங்கங்கள் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தது.

    மேலும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தரும்படி பிரசாரமும் நடந்தது. வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரி ஆட்டோ, டெம்போ, தனியார் பஸ் உரிமையாளர்கள், மார்க்கெட் சங்கம், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.

    நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. புதுவையில் தனியார் பஸ்களே அதிகளவில் இயக்கப்படுகிறது. முழு அடைப்பின் காரணமாக நாளை தனியார் பஸ்கள் ஓடாது.

    அதேநேரத்தில் போராட்டத்தில் ஆளும் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கமும் பங்கேற்றுள்ளதால் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் இயங்க வாய்ப்பில்லை.


    இதேபோல ஆட்டோ, டெம்போவும் இயங்காது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியமார்க்கெட், சின்ன மார்க்கெட் ஆகியவையும், தனியார் வணிக, வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருக்கும். பந்த் போராட்டத்தையொட்டி நாளை காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது.

    நாளை மறுநாள் தொழிற்பேட்டைகளில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்காது. #BusStrike
    Next Story
    ×