search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 6-ந்தேதி தொடங்கும்: அமைச்சர் அன்பழகன்
    X

    என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 6-ந்தேதி தொடங்கும்: அமைச்சர் அன்பழகன்

    முதல்கட்ட மருத்துவ கவுன்சிலிங் முடிந்தவுடன் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 6-ந்தேதி தொடங்கும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
    சென்னை:

    பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இந்த வருடம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 18,514 பேர் அதிகமாக விண்ணப்பித்து உள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரியாக 83,727 பேர் பதிவு செய்துள்ளனர்.

    விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடந்தது.

    உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரேண்டம் எண்களை கம்ப்யூட்டர் மூலம் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. கடந்த வருடம் கலந்தாய்வில் கலந்து கொண்ட 26 தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு கல்ந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கவில்லை.

    இதன்காரணமாக 4085 இடங்கள் குறைந்துள்ளன. இந்த வருடம் புதிதாக கோவை, மதுரை, திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல கல்லூரிகளில் 720 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள 1020 பொறியியல் இடங்களும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நிரப்பப்படும்.

    வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்கள் மூலம் ஒரு வார காலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். சென்னையில் மட்டும் 17-ந் தேதி வரை கூடுதலாக 3 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும்.

    சான்றிதழ் சரிபார்க்க மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம், நாள், இடம் ஆகியவை எஸ்.எம்.எஸ் மற்றும் இ.மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

    சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவுபெற்ற பிறகு உத்தேசமாக ஜூலை 6-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வை பொறுத்து சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Tamilnews
    Next Story
    ×