search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு பஸ்சை பெட்ரோல் ஊற்றி எரித்த மேலும் 5 பேர் கைது
    X

    தமிழக அரசு பஸ்சை பெட்ரோல் ஊற்றி எரித்த மேலும் 5 பேர் கைது

    தமிழக அரசு பஸ்சை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேதராப்பட்டு:

    கடந்த 27-ந்தேதி மாலை புதுவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகஅரசு பஸ் ஒன்று  கிழக்கு கடற்கரைசாலை  வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது. கனகசெட்டிகுளத்தில் புதுவை எல்லை நுழைவு வாயிலில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் பஸ்சை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் பெட்ரோலை ஊற்றி பஸ்சுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் எந்தவித காயமின்றி உயிர் தப்பினர்.

    இந்த பஸ் எரிப்பு தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இதற்கிடையே அரசு பஸ்சை  தீவைத்து எரித்த குயிலாப்பாளையத்தை சேர்ந்த அருண் உள்பட  5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.  இதையடுத்து  காலாப்பட்டு போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வன்னியர் சங்க தலைவர் குரு மரணம் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரவியதால் ஆவேசம் அடைந்து தமிழகஅரசு பஸ்சை தீவைத்து எரித்ததாக அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும்  விசாரணையில் இந்த சம்பவத்தில் தங்களுடன் பெரிய காலாப்பட்டு கார்த்திகேயன் (வயது19), கோரிமேடு பாலமுருகன் கோவில் தெருவை சேர்ந்த இளையபெருமாள் (21), கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த மாவீரன் (19), வம்பாகீரப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்த முகிலன் (18) மற்றும் சோலை நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19) ஆகியோர் ஈடுபட்டதாக  வாக்குமூலம் அளித்தனர்.

    இதன் அடிப்படையில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம்  ஆகியோர் விசாரணை நடத்தி கார்த்திக்கேயன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×