search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக்கையொட்டி புரசைவாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடப்பட்டு இருக்கும் காட்சி.
    X
    வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக்கையொட்டி புரசைவாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடப்பட்டு இருக்கும் காட்சி.

    வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்- தமிழகத்தில் ரூ.7 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை முடங்கியது

    வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னையில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான 12 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை தேங்கியுள்ளது. #BankStrike
    சென்னை:

    வங்கி ஊழியர்களுக்கு 2017 நவம்பர் மாதத்திற்கு பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

    ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் கடந்த 6-ந்தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

    இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. ஊதிய உயர்வு திருப்திகரமாக இல்லாததால் திட்டமிட்டப்படி 2 நாள் வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினார்கள்.

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    தமிழகத்திலும் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் வங்கிகள் தவிர அனைத்து வங்கி ஊழியர்களும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர்.

    10,500 வங்கி கிளைகளில் பணியாற்றக்கூடிய 45 ஆயிரம் ஊழியர்கள் இதில் பங்கேற்றதால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, போடவோ முடியவில்லை. டெபாசிட் செய்யவும் இயலவில்லை.

    காசோலை பரிவர்த்தனை, பணமாற்றம், அந்நிய செலாவணி மாற்றம் உள்ளிட்ட அனைத்து வங்கி நடவடிக்கைகளும் முடங்கின. அரசு கருவூல பணிகள், ஏற்றுமதி, இறக்குமதி பணபரிமாற்றம், கடனை திருப்பி செலுத்துதல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான 12 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை தேங்கியுள்ளது.


    ஏ.டி.எம். மையங்களில் நிரப்பி வைக்கப்பட்ட பணம் காலியானதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    சென்னையில் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வங்கிகள் மூடப்பட்டன. வங்கிகளின் மண்டல அலுவலகம், தலைமை அலுவலகங்களில் மட்டும் அதிகாரிகள் பணிக்கு வந்தனர்.

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாளை வரை நீடிப்பதால் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பணம் உள்ள சில ஏ.டி.எம்.களில் கூட இன்று மாலைக்குள் தீர்ந்து விட வாய்ப்பு உள்ளது.

    வங்கிகளுக்கு நேரில் சென்று பெரும் தொகை எடுக்க முடியாதவர்கள் அவசர தேவைகளை சமாளிக்க ஏ.டி.எம்.களை மட்டுமே நாட வேண்டியுள்ளது. இதனால் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    வங்கிகள் மூடப்பட்டதால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், சிறு தொழில் செய்யக் கூடியவர்கள், கம்பெனியை சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி முன்பு இன்று காலையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    போராட்டம் குறித்து வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காமல் பிடிவாதம் செய்து வருகிறது. பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வில் மட்டும் பிடிவாதம் செய்வது ஏன்?

    பல ஆயிரம் கோடி வராத கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுகிறார்கள். எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இனி அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BankStrike
    Next Story
    ×