search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் ‘நிபா’வைரஸ் நோய் பரவவில்லை - சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி
    X

    தமிழகத்தில் ‘நிபா’வைரஸ் நோய் பரவவில்லை - சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி

    ‘நிபா’ வைரஸ் நோய் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பரவவில்லை. நோய் பராவமல் இருப்பதற்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #nipahvirus
    சென்னை:

    தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ‘நிபா’ வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை. எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    நிபா வைரஸ் 1998-99ம் ஆண்டுகளில் பன்றிகளில் உருவாகி அதன்பிறகு மற்ற விலங்குகளுக்கு வந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயாக மாறியுள்ளது. அது கேரளாவில் பரவத் தொடங்கியதும் அங்குள்ள சுகாதாரத்துறையுடன் தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம்.

    அவர்கள் அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறி இருக்கிறார்கள். இது பரவக்கூடிய நோய் ஆகும். இந்த வைரஸ் கேரளாவில் இருந்து தமிழகம் பரவக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

    இது கேரளாவில் புதிதாக பரவுவதால் அதன் விவரங்களை வாங்கி அனைத்து பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர்களிடம் ஆய்வுக்காக கொடுத்துள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    இது கால்நடையில் இருந்து பரவக்கூடிய நோயாக இருப்பதால் கால்நடைத் துறையுடனும் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

    இது வவ்வால்களில் இருந்து பரவும் என்று சொல்வதால் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விலங்குகளுக்கு ஏற்படும் 70 சதவீத நோய்கள் மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. அதில் இதுவும் ஒன்று.

    நோய் பரவாமல் தடுக்க மனிதர்களின் இருப்பிடமும், பன்றிகளின் இருப்பிடமும் ஒன்றாக இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு காய்ச்சல் என்றால் சுகாதாரத் துறையின் கண்காணிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

    தற்போது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. கால்நடைகள் வளர்க்கப்படும் இடங்களில் கூடுதலாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nipahvirus
    Next Story
    ×