search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளை கண்டித்து மறியல்- கரும்பு விவசாயிகள் 94 பேர் கைது
    X

    பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளை கண்டித்து மறியல்- கரும்பு விவசாயிகள் 94 பேர் கைது

    பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.50 கோடி பாக்கி தொகையையும், பெரம்பலூர் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு எப்.ஆர்.பி. மற்றும் எஸ்.ஏ.பி. விலைக்குரிய பாக்கி தொகையையும் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்தபடி வேளாண் உற்பத்தி செலவினை கணக்கிட்டு 1½ மடங்கு கூடுதல் விலையை அறிவிக்க வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.

    கரும்புக்கான மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்காததை கண்டித்தும், கரும்பு விவசாயிகளை பாதிப்பு ஏற்படுத்திடும் ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தி வருவதனால் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் டிராக்டர் உரிமையாளர் சங்கம் ஆகியவை இணைந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    இதனால் நேற்று புதிய பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பழகன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கம், கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கம், பங்குதாரர் மற்றும் கரும்பு வளர்ப்போர் சங்கம் ஆகிய அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும், டிராக்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தேவேந்திரன் ஆகியோர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை ஒன்று திரண்டனர்.

    ஊர்வலமாக செல்வதற்கும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று விவசாயிகளிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×