search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் மழைக்கு பெண் உள்பட 4 பேர் பலி
    X

    திருப்பூரில் மழைக்கு பெண் உள்பட 4 பேர் பலி

    திருப்பூரில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மற்றும் சூறாவளி காற்றுடன்பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்லடத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது பல்லடம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை முன் பகுதியில் சிலர் ஒதுங்கி இருந்தனர்.

    அப்போது திடீரென கழிவறையின் மேற்கூரை ஷீட் பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த பி.என். நகர் அம்மா பாளையத்தை சேர்ந்த கொத்தனார் அசோக்குமார் (38), வெங்கடேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த வெங்கடேஷ் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பல்லடம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிவறை மேல் நிலை தொட்டியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கசிந்து கொண்டு இருந்துள்ளது. இதனால் மேற்கூரை நனைந்து பலம் இழந்து காணப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது.

    இடிந்து விழுந்த மேற்கூரையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். கோவை மாவட்டம் சோமனூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்திற்கு பின்னர் அரசு கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் பல்லடத்தில் பஸ் நிலைய கழிவறை மேற்கூரை இடிந்து வாலிபர் பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது.

    பலியான அசோக்குமாருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (43). இவர் ஊராட்சி தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பெய்த பலத்த மழையின் போது இவர் தனது வீட்டின் முன் உள்ள ஷெட்டில் நாயை கட்ட சென்றார்.

    அப்போது அங்கிருந்த மின் கம்பம் மீது இடி தாக்கியது. இதனால் மின் கம்பி அறுந்து ஷெட் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி ஈஸ்வரன் பலியானார்.

    திருப்பூர் மற்றும் தாராபுரம், உடுமலை பகுதியிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. திருப்பூர் அருகே உள்ள சீராணம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வாத்தாள் (68). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் தெய்வாத்தாள் வீட்டின் அருகே உள்ள மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. ஓடுகள் உடைந்து தெய்வாத்தாள் மீது விழுந்து அவர் பலியானார்.

    திருப்பூர் வீரபாண்டி பகுதியில் ஆவின் பாலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சவுந்தர சீலன் என்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

    திருப்பூர் மங்கலம் சாலை குள்ளே கவுண்டன் புதூரில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் தனியார் நிறுவன உரிமையாளர் சிவராமன் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர்கள் கம்பெனி வாகனத்தில் இருந்து இறங்கி வீடுகளுக்கு நடந்தே சென்றனர்.

    பல்லடம் லிட்டில் பிளவர் பள்ளி முன் மிகப்பெரிய மரம் சாலையின் நடுவே சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பலத்த இடியுடன் பெய்த மழைக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

    கோவை பால சுந்தரம் ரோட்டில் இடி தாக்கியதில் மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

    Next Story
    ×