search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி- தலையங்கம்
  X

  நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி- தலையங்கம்

  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள். பாரதி கண்ட உண்மையான புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் இது தான்.
  சென்னை:

  நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதரர்கள் என்று பள்ளி மைதானத்தில் தேசிய கொடியின் கீழ் நின்று உரக்க சொல்லும் போது மெய்சிலிர்க்கத்தான் செய்யும்.

  ஆனால் அந்த சகோதரர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

  பல்வேறு மாநிலங்கள். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு தாய்மொழி இருக்கிறது. அதை மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்ற மாநிலத்தவர்களுடன் பேச கூட முடியாமல் தவிப்பதுண்டு.

  இது சாமானிய மக்கள் நிலை மட்டுமல்ல. இந்திய ஆட்சி பணிக்கான உயர் படிப்புகளை படித்து விட்டு பல்வேறு மாநிலங்களுக்கு பணியாற்ற செல்பவர்களும் தாய் மொழியோடு ஆங்கிலத்தை மட்டுமே தெரிந்து வைத்திருப்பதால் சம்பந்தப்பட்ட மாநில மக்களோடு நேரடி தொடர்பு கொள்ள முடியாமல்தான் இருக்கிறார்கள்.

  மாநில அரசின் மிக உயர்ந்த பதவிகள் மற்றும் மத்திய அரசு பதவிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பணிபுரிகிறார்கள்.

  இவர்களை மெத்த படித்தவர்கள் மட்டுமே அணுகுவதில்லை. பல்வேறு பிரச்சனைகளுக்காக சாமானிய மக்களும் அணுகுகிறார்கள். அவர்களுக்குள் மொழி ஒரு தடையாக இருப்பதால் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுமக்களும் இதன் காரணமாக அவர்களை சந்திக்க தயக்கம் காட்டுகின்றனர்.

  எவ்வளவுதான் கல்வியில் புலமை பெற்றிருந்தாலும் தாய்மொழியில் பேசினால் மட்டுமே முழுமையான புரிதல்இருக்கும். இது எல்லோருக்கும் பொதுவானது.

  ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழை கற்று கொள்கிறார்கள். அவர்களுக்கும் மக்களுக்குமான நெருக்கம் அதிகமாகவே இருக்கிறது. அரசு செயலர் சுகன்தீப்சிங்பேடி தமிழ்கற்று தமிழிலேயே பேசி வருகிறார்.

  இப்படிப்பட்ட அதிகாரிகள் மக்களோடு நெருங்கி பிரச்சனைகளை நேரில் புரிந்து செயல்பட முடிகிறது.

  பல உயர் அதிகாரிகள் ஆங்கிலத்தை மட்டுமே தொடர்பு மொழியாக வைத்துக்கொள்கிறார்கள். இதனால் சாதாரண மக்களுக்கும் அவர்களுக்குமான தொடர்பு அறுந்து போகிறது.

  சென்னை ஐகோர்ட்டின் 2-வது பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையோடு இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.

  பொதுவாக நீதித்துறை என்பது அடித்தட்டு மக்கள் வரை தொடர்பு உள்ளது. நீதித்துறையில் பணியாற்றுபவர்களும் பணியாற்றும் மாநில மொழிகளை அறிந்து வைத்திருப்பது நல்லது.

  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தாமாகவே முன் வந்து தமிழ் கற்றுக்கொள்ளபோவதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

  இதையும் ஒருவகையிலான உத்தரவாக எடுத்துக் கொள்வதில் தப்பில்லை. உயர்பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் இதை பின்பற்றி பேசும் அளவுக்காவது தமிழை கற்றுக்கொள்ள வேண்டும்.

  தமிழ்இலக்கியம் தொன்மை வாய்ந்தது. கலாச்சாரம் பெருமைமிக்கது. எனவே தமிழ்இலக்கியத்தையும் கற்றுக்கொள்ள முயற்சிப்பேன் என்று இந்திரா பானர்ஜி கூறி இருப்பது அவரது தனிப்பட்ட ஈடுபாடு. அந்த காலத்தில் தமிழால் ஈர்க்கப்பட்ட கால்டுவெல், வீரமாமுனிவரை கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்காலத்திலும் உத்தரகாண்டில் ஒரு தருண் விஜய் இருக்கிறார். இதெல்லாம் தொன்மையான மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை பொறுத்தது.

  ஆனால் நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்கள் மக்கள் பேசும் மாநில மொழிகளை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு சட்டம் தேவையில்லை. ஆர்வம் இருந்தால் போதும். அதைத்தான் இந்திராபானர்ஜி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

  மக்கள் தொடர்புக்கு மொழியே பாலமாக இருப்பதால் அதை கற்றுக்கொள்வது தான் பதவியில் இருப்பவர்களுக்கு பலம். எல்லோரும் இந்த பலத்தை பெறவேண்டும்.

  நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்குகளைத்தான் பதிவு செய்வார்கள். ஆனால் இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள். பாரதி கண்ட உண்மையான புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் இது தான்.

  அன்று கொல்கத்தாவில் இருந்து வந்த சகோதரி நிவேதிதா பாரதிக்கு தூண்டுகோலாக அமைந்தார். அதே கொல்கத்தாவில் இருந்து இன்று வந்துள்ள இந்திராபானர்ஜி மொழியும் தேசப்பற்றும் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன பாரதியின் வாக்குக்கு வலிமை சேர்த்துள்ளார்.
  Next Story
  ×