search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும்: தெற்கு ரெயில்வே
    X

    இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும்: தெற்கு ரெயில்வே

    “விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நிறைவடையும்”, என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி தெரிவித்தார்.
    சென்னை:

    இந்தியாவின் குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை அயனாவரம் ஆர்.பி.எப். பரேடு கிரவுண்டில் நேற்று குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த காரில் நின்றபடி அவர் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து வஷிஷ்டா ஜோஹ்ரி குடியரசு தின விழா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தென்னகத்து மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான விழுப்புரம்-திண்டுக்கல் இடையே 273 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். தற்போது அதில் 93 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டியது உள்ளது. இந்தப்பணி முடிந்தால் தென்னக பகுதிகளின் இணைப்பு இன்னும் நெருக்கமாகும்.

    சென்னை சென்டிரல் மற்றும் பேசின்பிரிட்ஜ் மார்க்கத்துக்கான 5 மற்றும் 6-வது வழித்தடங்கள் அமைத்தல், திருவள்ளூர்-அரக்கோணம் இடையிலான 4-வது வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. திருவல்லா-செங்கனூர் இடையிலான இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. தெற்கு ரெயில்வே எல்லைக்குட்பட்ட இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைய உள்ளன.

    கடந்த ஆண்டு 1,151 முன்பதிவு ரெயில்களும், 7 ஆயிரத்து 954 முன்பதிவில்லா ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளன. 2,708 பெட்டிகள் தற்காலிகமாகவும், 76 பெட்டிகள் நிரந்தரமாகவும் ரெயில்களில் இணைக்கப்பட்டு உள்ளன. மதுரை நோக்கி பயணிக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் மெயில் உள்ளிட்ட ரெயில் பெட்டிகள், எல்.எச்.பி. வகை பெட்டிகளாக மாற்றப்பட்டிருக்கிறது.

    2015 ஆண்டை விட 2016-ம் ஆண்டில் சரக்கு வருவாய் 8.6 சதவீதம் குறைந்தபோதிலும், பயணிகள் வருவாய் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பயணிகள் வசதிக்காக கடந்த ஆண்டில் ரூ.63 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ரூ.52 கோடி அளவில் பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.


    1,552 ரெயில் பெட்டிகளில் 5 ஆயிரத்து 33 ‘பயோ-டாய்லெட்’கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்துக்கான சிறப்பு பணிகளுக்கான திட்ட பரிசு மதுரை, சேலம், திருச்சி கோட்டங்களுக்கும் வழங்கப்பட்டன. 91 ஆளில்லா ரெயில்வே கேட்கள் மூடப்பட்டு உள்ளன. ‘ஆதார்’ முகாம்களும் நடத்தப்பட்டு 61 ஆயிரத்து 234 ரெயில்வே அதிகாரிகள்-பணியாளர்கள் பயனடைந்து உள்ளனர். 977 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.

    நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே உதவி பொதுமேலாளர் பி.கே.மிஸ்ரா, சென்னை கோட்ட வணிக மேலாளர் அஜித் சக்சேனா, கணக்காளர் பிரிவு மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன், முதன்மை பொறியாளர்கள் கே.கே.சர்மா, ஆர்.குப்பன், முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி தனஞ்செயன், அதிகாரிகள் ரெயில் ரவி, பாஸ்கர், ரெயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் எஸ்.கே.பாரி, முதுநிலை கோட்ட அதிகாரி கே.கே.அஷ்ரப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அதேபோல, சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்.பிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். முதன்மை பொறியாளர் எல்.பி.திரிவேதி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக எஸ்.மணி பேசுகையில், “எந்த ஆண்டிலும் இல்லாத அளவு கடந்தாண்டு 2,005 ரெயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சென்னை ரெயில் அருங்காட்சியகம் புனரமைக்கப்பட்டு 2 காட்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரி மலை ரெயிலுக்காக 15 பெட்டிகளை தயாரிக்க உள்ளோம். மேலும் மும்பை நகர்ப்புற போக்குவரத்து திட்டத்துக்கு 565 பெட்டிகளும், கொல்கத்தா மெட்ரோவுக்கு 16 பெட்டிகளும், டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் 84 பெட்டிகளை இலங்கைக்கும் தயாரித்து அனுப்ப உள்ளோம். அனைத்து விதமான மெட்ரோ ரெயில் பெட்டிகளை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது”, என்றார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மாநில அலுவலக செயல் இயக்குனர் யு.வி.மன்னூர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை அண்ணாசாலையில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென்மண்டல அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தென்மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து நடந்த கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சென்னையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் காவிரி படுகை மேலாளர் பவன்குமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதிகாரிகள் பி.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை துறைமுகம் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், துறைமுகசபை தலைவர் பி.ரவீந்திரன், தேசியக்கொடியை ஏற்றிவைத்து, பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சிறீல் சி.ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொதுகணக்கு அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் அலுவலக உயர் அதிகாரி அல்கா ரேகானி பரத்வாஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஊழியர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    அதேபோல் ரெயில்வே கட்டண தீர்ப்பாயம் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நீதிபதி பி.துர்கா பிரசாத் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் தேசியக் கொடியை விமான நிலைய இயக்குனர் சந்்திரமவுலி ஏற்றி வைத்தார். பின்னர் மத்திய தொழிற்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழிற்படை மற்றும் விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×