search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை பத்திர பதிவு தடை நீடிக்கும்: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை பத்திர பதிவு தடை நீடிக்கும்: ஐகோர்ட்டு உத்தரவு

    அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற தடை உத்தரவு நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ‘தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு இருந்த 69 சதவீத விவசாய நிலங்கள், 2013-ம் ஆண்டு 58 சதவீதமாக குறைந்து விட்டது. இந்த 11 சதவீத விளை நிலங்கள் எல்லாம் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாறியுள்ளது.

    தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதிமகாதேவன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி விசாரித்து, விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் போது, அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கூடாது என்று பத்திரப்பதிவுத் துறைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஒரு அரசாணையை தாக்கல் செய்தார்.

    அதில், தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 2008, பிரிவு 22-ஏ-வின்படி இந்த அரசாணை, கடந்த (2016ம் ஆண்டு) அக்டோபர் 20-ந்தேதி பிறப்பிக்கப்படுகிறது. இந்த அரசாணை உட்பிரிவில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தும், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை பத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது’ என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த அரசாணையை படித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?’ என்பதை முதலில் அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து, ஏற்கனவே பிறப்பித்த தடையை அகற்ற மறுத்து விட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், முறையாக சட்டப்படி வீட்டு மனைகளை உருவாக்க வேண்டும் என்றால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.20 லட்சம் செலவு செய்ய வேண்டும். அந்த செலவினை செய்யாமல், முறைகேடாக வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வாங்கி விடுகின்றனர்.

    எனவே, முறைகேடாக வீட்டு மனைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். மேலும், விளை நிலங்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல், விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலமாக கிடந்தால், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நிலங்களை வகைப்படுத்தி அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிலங்களை வகைப்படுத்தி அரசு மனு தாக்கல் செய்யவில்லை. இதற்கு 2 வார கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதேபோல, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘வீட்டு மனைகள் குறித்து புதிய விதிமுறைகளை அரசு உருவாக்க முடியாது. இந்த விதிமுறைகளை உருவாக்க ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்கவேண்டும்’ என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள். அதுவரை, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற தடை உத்தரவு நீடிக்கும் என்றும் உத்தரவிட்டார்கள்.
    Next Story
    ×