என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமச்சந்திரன்
    X
    ராமச்சந்திரன்

    புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை

    கைதான சேகர் ரெட்டியின் கூட்டாளி புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் தங்கம் பதுக்கியதாக தமிழகத்தை சேர்ந்த காண்டிராக்டரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, கூட்டாளி பிரேம் ஆகியோரது வீடுகளில் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி 131 கோடி ரூபாய், 171 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவரது ஆதரவாளர்களான தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், அவரது சகோதரர் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோரும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள், அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்கள் , தொழிலதிபர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வருமான வரித்துறையினரின் ரெய்டு பீதிக்கும் உள்ளாகினர்.

    இந்நிலையில் இன்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ. அதிகாரிகள் 10 பேர் அடங்கிய குழுவினர் புதுக்கோட்டை வந்தனர். அவர்கள் நிஜாம் காலனி, கே.எல்.கே.எஸ். நகர் உள்ளிட்ட 4 இடங்களில் செயல்பட்டு வரும் ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகளின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

    கைதான ராமச்சந்திரன் முத்துப்பட்டினம் பகுதியில் தற்போது புதிதாக வேளாண்மை கல்லூரி ஒன்றை கட்டி வருகிறார். பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். அது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×