என் மலர்
செய்திகள்

கடன் தொல்லையால் விஷம் குடித்தும் உயிர் பிழைத்த காவலாளி தூக்குப்போட்டு பலி
புதுச்சேரி:
புதுவை முத்திரையர்பாளையம் கல்மேடுபட்டை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 54). கூட்டுறவு துறை அலுவலக காவலாளி. இவருக்கு கல்யாணி என்ற மனைவியும், 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
வீரப்பனுக்கு, அவரது சொந்த செலவு மற்றும் குடும்ப சுமையால் கடன் தொல்லை ஏற்பட்டது. அதனை தீர்க்க முயன்றும் முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த வீரப்பன், சமீபத்தில் விஷம் குடித்தார்.
உயிருக்கு போராடியவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சையால் உடல் நலம் தேறி உயிர் பிழைத்த வீரப்பன், யாருக்கும் தெரியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடி வீட்டுக்கு வந்து விட்டார்.
சில நாட்கள் கழித்து, அவருக்கு கடன் கொடுத்தவர்கள் மீண்டும் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வீரப்பன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்தும் உயிர் பிழைத்தவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.