என் மலர்
செய்திகள்

ஏ.டி.எம்.மில் கியூவில் நின்று பணம் எடுத்த நாராயணசாமி
புதுச்சேரி:
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி சிட்டி யூனியன் வங்கி வழியாக காரில் சென்றார். அப்போது அவர் அங்குள்ள சிட்டி யூனியன் வங்கி வாசலில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருப்பதை பார்த்தார்.
இதனையடுத்து காரை நிறுத்தி இறங்கிய நாராயணசாமி ஏ.டி.எம். கியூ வரிசைக்கு சென்று வரிசையில் நின்றார். அங்கு கியூவில் நின்றிருந்த பொது மக்களிடம் குறை கேட்டார்.
அப்போது வரிசையில் நின்ற பொதுமக்கள் வங்கி வளாகத்தில் ஒரு ஏ.டி.எம். மட்டுமே செயல்படுவதாக குற்றம் சாட்டினர். இதற்குள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏடி.எம். கியூவில் நிற்கும் தகவல் வங்கி அதிகாரிகளுக்கு சென்றது.
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து நாராயணசாமியிடம் பேசினர். அப்போது அதிகாரிகள் புதுவையில் தங்கள் வங்கியில் மட்டும் தான் தொடர்ந்து ஏ.டி.எம். இயங்கி வருவதாக தெரிவித்தனர்.
அதற்கு நாராயணசாமி செயல்படாமல் உள்ள ஏ.டி.எம்.-ஐயும் சீர்செய்து இயக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் வங்கி அதிகாரிகள் அவரை ஏ.டி.எம். அறைக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து நாராயணசாமி ஏ.டி.எம்.மில் தன்னுடைய வங்கி அட்டையை செலுத்தி ரூ. 2 ஆயிரம் எடுத்தார். அவருக்கு 100 ரூபாய் நோட்டுகளாக ரூ. 2 ஆயிரம் கிடைத்தது.
தொடர்ந்து அவர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஏ.டி.எம். இயங்காததால் பணம் எடுக்க மக்கள் வங்கி முன்பு நீண்ட கியூ வரிசையில் காத்திருந்தனர். செலான் மற்றும் காசோலை மூலம் மட்டுமே பணம் எடுத்தனர்.
இதனால் வங்கி அதிகாரிகளை அழைத்து நாராயணசாமி ஏ.டி.எம். ஏன் செயல்படவில்லை? என கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள் போதிய பணம் இல்லை என கூறினர்.
பணம் இல்லாவிட்டால் தலைமையிடம் கேட்டு வாங்குங்கள். மக்களை அலைக்கழிக்காதீர்கள். ஏ.டி.எம்.மில் பணத்தை வைத்தாலே கூட்டம் குறையும். அதனை முதலில் செய்யுங்கள் என்று நாராயணசாமி அறிவுறுத்தினார்.