search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் முற்றுகை
    X

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் முற்றுகை

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பூஞ்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சர்ச், குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து சின்னாளப்பட்டியில் இருந்து அம்பாத்துரை செல்லும் வழியில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு இன்று கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. இதனை அறிந்த அம்பாத்துரை கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூதாட்டி ஒருவர் மண்எண்ணை கேனுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அம்பாத்துரை பொதுமக்கள் கூறுகையில், சின்னாளப்பட்டியில் இருந்து அம்பாத்துரை செல்லும் சாலையில் அரசு சத்துணவு தயாரிப்பு மையம் பின்புறம் டாஸ்மாக் கடைக்கான வேலைகள் தொடங்கியுள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான மாணவ-மாணவிகள், இளம்பெண்கள், முதியவர்கள், சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடை இங்கு வந்தால் குடிமகன்கள் அட்டகாசம் தாங்க முடியாது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அதையும் மீறி வேலைகளை தொடங்கியுள்ளனர் என்றனர். சம்பவ இடத்துக்கு வந்த சின்னாளப்பட்டி போலீசார் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×