என் மலர்tooltip icon

    செய்திகள்

    வல்லநாடு அருகே குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு: ஆட்டோ டிரைவர் படுகொலை- சகோதரர் கைது
    X

    வல்லநாடு அருகே குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு: ஆட்டோ டிரைவர் படுகொலை- சகோதரர் கைது

    மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணனை, தம்பியே கொலை செய்த சம்பவம் வல்லநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த வல்லநாடு அருகே உள்ள மணக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைச்சி. இவரது கணவர் துரைச்சாமி இறந்து விட்டார். இவர்களுக்கு பழனிக்குமார், இசக்கிபாண்டி, பார்வதி என்ற 3 மகன்கள் உண்டு.

    பழனிக்குமாரும், பார்வதியும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இசக்கிபாண்டி உள்ளூரிலேயே வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழனிக்குமாரும், பார்வதியும் ஊருக்கு வந்திருந்தனர்.

    நேற்று இரவு தாய் துரைச்சியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மகன் இசக்கிபாண்டி தகராறு செய்தார். அதை சகோதரர்கள் பழனிக்குமாரும், பார்வதியும் கண்டித்தனர். ஆனால் அவர்கள் பேச்சை கேட்காமல் தாயுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் இசக்கிபாண்டி படுத்து தூங்கி விட்டார்.

    தனது அண்ணன் மதுகுடிக்க பணம் கேட்டு தாயுடன் வாக்குவாதம் செய்ததால் பார்வதி ஆத்திரம் அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் எழுந்த அவர் இசக்கி பாண்டியின் கழுத்தில் துணியை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சு திணறிய அவர் சிறிது நேரத்தில் இறந்தார். அதன் பின்னர் அங்கிருந்து பார்வதி தப்பி சென்றார்.

    இன்று காலை துரைச்சி எழுந்த போது, இசக்கிபாண்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் மணக்கரைக்கு விரைந்து வந்து இசக்கிபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பார்வதியை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப் பதாவது:-

    நான் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தேன். எனது அண்ணன் இசக்கி பாண்டி அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து வந்தான். நேற்றும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவன் மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு எனது தாயிடம் தகராறு செய்தான். நான் எவ்வளவு கூறியும் அவன் கேட்கவில்லை.

    இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நள்ளிரவில் துரைப்பாண்டி தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது துணியால் அவனது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணனை, தம்பியே கொலை செய்த சம்பவம் வல்லநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×