என் மலர்tooltip icon

    செய்திகள்

    களைகட்டிய சீசன்: கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    களைகட்டிய சீசன்: கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தற்போது குளுகுளுசீசன் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்வதுடன் இதமான காற்றும் வீசுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குடும்பம் குடும்பமாக கொடைக்கானல் வருகின்றனர்.

    வாரவிடுமுறை என்பதால் நேற்று அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்பட்டது. அதுபோல் இன்றும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொடைக்கானல் நகர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனை தவிர்க்க முக்கிய இடங்களில் ஒருவழிப் பாதை அமல்படுத்தப்பட்ட போதிலும் அணிவகுத்து வரும் வாகனங்களால் செவன் ரோடு, ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, பைன்பாரஸ்ட் சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே சாலை ஓரங்களில் நிறுத்தி உள்ளனர்.

    நகரில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பியுள்ளன. இதனால் குடும்பத்தினருடன் வந்த பலர் தங்குவதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டனர். அவர்கள் தாங்கள் வந்த வாகனங்களிலேயே தங்கினர்.

    கூட்டத்தை பயன்படுத்தி ஓட்டல்களில் சாப்பாடு மற்றும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

    பிரையண்ட் பூங்காவில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு பூத்துள்ள வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். போக்குவரத்து சிரமம் காரணமாக வாகனங்களை நிறுத்திவிட்டு குறிப்பிட்ட சுற்றுலா இடங்களுக்கு நடந்து சென்றே பார்த்தனர். பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், தூண்பாறை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

    பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஆங்காங்கே கூட்ட மிகுதியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
    Next Story
    ×