என் மலர்
செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை
நெல்லை:
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. வெப்பசலனம் காரணமாக வழக்கத்தை விட வெயில் கொடுமை அதிகமாக இருந்தது. நெல்லையிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வாட்டி வதைத்த வெயில் அக்னிநட்சத்திரம் தொடங்கிய பின்னர் மேலும் அதிகமாக சுட்டெரித்தது.
நேற்று காலையிலும் வெப்பம் தகித்தது. மதியத்திற்கு பின்னர் சிறிது வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர மற்றும் மாவட்டத்தில் கன மழை பெய்தது. மாலை 5 மணிக்கு பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. அப்போது காற்றும் சூறாவளிபோல் வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன.
நெல்லையில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தச்சநல்லூர் பைபாஸ் சாலை, வண்ணார்பேட்டை பகுதி, மாசிலாமணிநகர், டவுண் வடக்கு மவுண்ட்ரோடு, வழுக்கோடை பழனி தெரு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்தன. சில இடங்களில் கடைகளின் மேற்கூரைகளும் காற்றில் பறந்தன.
நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் இருளில் தவித்தனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மேடு பள்ளங்கள் தெரியாமல் சிலர் கீழே விழுந்து சென்றனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று பாளையில் 20 மி.மீ மழையும், நாங்குநேரியில் 17 மி.மீ., நெல்லையில் 13 மி.மீ., சங்கரன்கோவிலில் 12 மி.மீ மழை பதிவானது. இன்றும் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.






