என் மலர்
செய்திகள்

நெகமம் அருகே விபத்து: பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
கோவை:
சூலூர் அருகே உள்ள விஜயம் நகரை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 28). சிவில் என்ஜினீயர். இவரது தாயார் வள்ளியம்மாள் (59) .
சம்பவத்தன்று ஜெயலட்சுமி , வள்ளியம்மாள் ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டனர்.
காரை ஓட்டிச்செல்வதற்காக கணுவாய் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் ஆறுச்சாமி (49) என்பவரை தீனதயாளன் நியமித்து இருந்தார்.ஆனால் ஜெயலட்சுமி டிரைவர் ஆறுச்சாமியை காரை ஓட்டவிடாமல் தானே ஓட்டிச் செல்வதாக கூறினார்.
அதன்படி காரை ஜெயலட்சுமி ஓட்டிச்சென்றார். டிரைவர் ஆறுச்சாமி காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். வள்ளியம்மாள் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
கார் நெகமம் அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியில் பல்லடம்–பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதியது. இதில் காரை ஓட்டிச்சென்ற ஜெயலட்சுமி, டிரைவர் ஆறுச்சாமி ஆகியோர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
பின் இருக்கையில் அமர்ந்து இருந்த வள்ளியம்மாள் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து நெகமம் போலீசார் விபத்தில் உடல் நசுங்கி பலியான ஜெயலட்சுமி, ஆறுச்சாமி ஆகியோரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






