search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

    • திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • மணமக்களுக்கு கட்டில், மெத்தை, தலையணை, வெள்ளியில் மெட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும், ஒரு மாத மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது.

    மண்ணச்சநல்லூர்:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று இலவச திருமணம் நடைபெற்றது.

    ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில், திருக்கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான செலவுகளையும் திருக்கோவில் நிர்வாகமே ஏற்கும் என்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்.

    அதன்படி, ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மண்டலங்களில் 500 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, இன்று (4-ந்தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் திருமணங்கள் நடைபெற்றன. சென்னை இணைய ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்டோருக்கான திருமண விழா இன்று நடைபெற்றது.

    அந்த வகையில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக திருமண ஜோடிகள் காலையிலேயே கோவில் மண்டபத்திற்கு வந்திருந்தனர். மணமகன் பட்டு வேட்டி, சட்டையிலும், மணமகள் பட்டுச்சேலையிலும் அமர வைக்கப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு தங்கம் பூட்டிய திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார். இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்களுக்கு கட்டில், மெத்தை, தலையணை, வெள்ளியில் மெட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும், ஒரு மாத மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது. திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்கள் சுமார் 500 பேருக்கு நேற்று இரவு, இன்று காலை சிற்றுண்டியும், திருமணம் முடிந்ததும் பகல் உணவாக விருந்தும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×