என் மலர்
செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.150 கோடி அளவில் பணம் பட்டுவாடா: தேர்தல் தள்ளி வைப்பு குறித்து பரபரப்பு தகவல்கள்
கரூர்:
சட்டமன்ற தேர்தலில் வி.ஐ.பி. தொகுதியாக மாறியுள்ள கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அதிலும் அ.தி. மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின்னர் தொகுதியில் கூடுதல் எதிர் பார்ப்பும் நிலவி வந்தது.
காரணம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.செந்தில்பாலாஜியும், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு செயலாளரும், தொழில் அதிபருமான கே.சி.பழனிசாமியும் போட்டியிடுவதுதான்.
மொத்தம் இந்த தொகுதியில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 434 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 96 ஆயிரத்து 481 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து ஆயிரத்து 953 பேர் ஆவர்.
இந்த தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் கலையரசன், பா.ம.க. சார்பில் பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி சார்பில் அரவிந்த், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடராஜன் மற்றும் அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உள்பட 36 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆனாலும் தொகுதியை வெல்வதில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக இரு கட்சி வேட்பாளர்களும் நடத்தி வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. தேர்தல் நாளை எதிர் நோக்கியிருந்த நிலையில் திடீரென அரவக்குறிச்சி தேர்தலை ஆணையம் தள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தபோதிலும் அனைத்து தொகுதிகளையும் மிஞ்சும் அளவுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம், அதிகாரிகளால் பணம் பறிமுதல் போன்றவையே தேர்தல் தள்ளி வைப்புக்கு காரணமாக ஆணையம் அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் அ.தி.மு.க. பிரமுகர் அன்பு நாதன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.4 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார். பணம் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆம்புலன்சு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனாலும் பல கோடி பணம் பதுக்கல் மறைக்கப்பட்டு விட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. அத்துடன் இந்த வழக்கில் தேடப்பட்ட அன்புநாதன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் முன்ஜாமீனும் பெற்றார். இதற்கும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதேபோல் தி.மு.க. வேட்பாளரான கே.சி.பழனிசாமியின் வீட்டில், லாட்ஜில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
இதன் அடுத்த கட்டமாக சென்னையில் உள்ள கே.சி. பழனிச்சாமியின் மகன் சிவராமன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் ஆனது.
இவை தவிர தொகுதி முழுவதும் பணம் பட்டுவாடா தொடர்பாக 33 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 7 புகார்களின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் ரூ.ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் பட்டுவாடா, வேட்டி, சேலை, பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. மொத்தத்தில் அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் ரூ.150 கோடி வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இப்பேற்பட்ட நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் நியாயமான முறையில் தேர்தலை நடத்த முடியாது என்பதால் ஆணையம் தேர்தலை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் லீலாவதியை தொடர்பு கொண்டு கேட்டபோது, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம், பரிசு பொருட்கள் விநியோகம், விதிமீறல்கள் தொடர்பாக வரப்பெற்ற புகார்களை நாங்கள் முறைப்படி தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள வெப் சைட்டிற்கு அனுப்பினோம். மற்றபடி தேர்தல் தள்ளி வைப்பு தொடர்பான தகவல் எங்களுக்கே தொலைக்காட் சியை பார்த்த பிறகு தான் தெரியவந்தது என்றார்.
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே பணம் பட்டுவாடா தொடர்பாக ஆணையமே தேர்தலை தள்ளிவைத்தது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






