என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் 50 வருட திராவிட ஆட்சியை மாற்ற வேண்டும்: சீமான் பேச்சு
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:–
தமிழகத்தில் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் ஆதரவு எங்களுக்கு பெருகி வருகிறது. குறிப்பாக நான் ஒவ்வொரு தொகுதியிலும் பேசும்போது எனது பேச்சை கேட்க நீண்டநேரம் காத்திருந்து இளைஞர்கள் கேட்டு வருகின்றனர்.
மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறிவரும் கட்சிகளின் பெயர்களையே யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை. தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. என்று கூட்டணியாம். இதில் இருப்பவர்கள் பலர் திராவிட கட்சிகளில் கூட்டணி அமைத்து போட்டி யிட்டவர்கள் தான், இந்த கூட்டணியில் இருக்கும் போதெல்லாம் மதுக்கடைகளை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு இப்போது மதுக்கடைகளை மூடுவோம் என்றால் என்ன அர்த்தம். இவர்கள் எப்படி மாற்றத்தை தருவார்கள்?.
அதேபோல் ஜெயலலிதாவிற்கு தோல்வி பயம் வந்த பிறகுதான் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நத்தம் விஸ்வாதன் மதுக்கடைகளை தமிழகத்தில் மூடுவதற்கு வாய்ப்புகளே இல்லை என்று கூறிய சில நாட்களில் ஜெயலலிதா இப்படி கூறியிருப்பதை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். தமிழகத்தில் 50 வருட திராவிட ஆட்சியை மாற்றுவதற்கு உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்.
இவ்வாறு அவர் பேசினார்.






