search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க 70 நுண் பார்வையாளர்கள்
    X

    ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க 70 நுண் பார்வையாளர்கள்

    ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய நடவடிக்கையாக இந்தியாவிலேயே முதல் முறையாக 70 நுண் பார்வையாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
    சென்னை:

    சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இன்று தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் முதல் முறையாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 70 நுண் பார்வையாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத சந்துக்களில் இரு சக்கர வாகனங்களில் சென்று தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

    ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒரு நுண் பார்வையாளரும், ஒரு போலீஸ்காரரும் இடம் பெறுவார்கள். அவர்கள் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள்.

    மேலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார்கள் வந்தால் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள். இந்த 70 நுண் பார்வையாளர்களும் மத்திய அரசு ஊழியர்கள் ஆவார்கள்.

    இவர்கள் மூன்று ஷிப்ட் அடிப்படையில் இரவு-பகலாக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரிப்பார்கள்.

    கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும், சோதனைகளில் ஈடுபடுவார்கள். கட்சிக்காரர்கள் கூட்டமாக வந்தால் அவர்களை கலைந்து போகச் செய்வார்கள்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதன் அடிப்படையில் இந்த 70 நுண் பார்வையாளர்கள் 256 ஓட்டுச்சாவடிகளிலும் கண்காணிப்பார்கள்.

    அவர்கள் வீதி, வீதியாக செல்ல உள்ளதால் பணப்பட்டு வாடா தடுக்கப்படும். இவர்கள் தேர்தல் நடக்கும் 12-ந்தேதி வரை பணியில் ஈடுபடுவார்கள்.



    இவர்கள் தவிர 30 பறக்கும் படைகளும் கண்காணிப்பு பணி செய்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் ரூ.14 லட்சம் ரொக்கப் பணம் பிடிபட்டுள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பணம் பிடிபட்டது தொடர்பான வீடியோ ஆதாரம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வா அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து அதிக புகார்கள் வருவதால் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? என்று கேட்டனர். அதற்கு அவர், பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    இதற்கிடையே பறக்கும் படைகள் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இந்த பணியை முடுக்கி விடுவதற்காக தேர்தல் கமி‌ஷனின் இயக்குனர் (செலவு) விக்ரம் பத்ரா இன்று (வியாழக்கிழமை) சென்னை வருகிறார்.

    அவர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று நேரடியாக கள ஆய்வு பணிகளை செய்ய உள்ளார். அந்த கள ஆய்வுக்குப் பிறகு அவர் அனைத்து தேர்தல் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

    Next Story
    ×