search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது: ராமதாஸ் அறிக்கை
    X

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது: ராமதாஸ் அறிக்கை

    தமிழகத்தில் ஒரே நாளில் 2 கொலைகள் நடந்திருக்கின்றன. சட்டம்-ஒழுங்கு கெட்டு போய்விட்டதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை நகர அதிமுக செயலராகவும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்த கனகராஜ் நேற்று காலை தமது நண்பருடன் இரு சக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த போது, இன்னொரு இரு சக்கர ஊர்தியில் வந்து வழிமறித்த கும்பல் மிகவும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளது.

    இந்த கொலை நடக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அவை இப்போது சமூக ஊடகங்கள் மூலம் வேகமாக பரவி வருகின்றன.

    அதேபோல், வேலூர் மாவட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும், கல்லூரி அதிபருமான ஜி.ஜி. ரவி என்பவர் வேலூர் காட்பாடி சாலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வெளியே வரும் போது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையும் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்திருக்கிறது.

    ஜி.ஜி. ரவி படுகொலை செய்யப்படுவது காவல்துறையினருக்கு முன்கூட்டியே தெரியும் என்றும், பல்வேறு காரணங்களால் இந்த கொலையை அவர்கள் தடுக்காமல் இருந்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் கடும் கண்டனத்திற்குரியது.

    ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழகக் காவல்துறையின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. திறமையானவர்களை முக்கியமான பணிகளில் அமர்த்தாமல், ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களை அமர்த்துவது, குற்றவாளிகளுக்கும், காவல் துறையில் உள்ள சிலருக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 11,600க்கும் அதிகமான கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் 1818 படுகொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒன்று கூட மேற்கொள்ளப்படவில்லை.

    தமிழகத்தின் முதல்- அமைச்சராக இருப்பவரே காவல்துறையை நம்பாமல் தனியார் பாதுகாவலர்களை தமது காவலுக்கும், இல்லத்தின் காவலுக்கும் நியமித்திருப்பதில் இருந்தே காவல் துறையின் இன்றைய நிலையை அறிந்து கொள்ள முடியும்.

    எனவே, காவல்துறையை வலுப்படுத்தும் வி‌ஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், காவல்துறை சீரமைப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×