search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சிக்கு அப்பாற்பட்டு பன்னீர்செல்வம் சிறப்பாக பணி புரிகிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
    X

    கட்சிக்கு அப்பாற்பட்டு பன்னீர்செல்வம் சிறப்பாக பணி புரிகிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

    கட்சிக்கு அப்பாற்பட்டு முதல்வர் பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பாராட்டியுள்ளார்.

    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கட்சிக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட வேண்டியவர் முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னே சென்ற தனது காரை நிறுத்தி பின்னால் வந்த முதல் அமைச்சர் காருக்கு வழி விட்டு மரியாதை செலுத்தி உள்ளார்.

    அதே போல் முதல்வர் பன்னீர்செல்வம், ‘‘எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கார் செல்கிறது. கவனமாக செல்லுங்கள். அவர் முன்னே போகட்டும்’’ என்கிறார்.

    இந்த அரசியல் நாகரீகம் பாராட்டுக்குரியது. கட்சிக்கு அப்பாற்பட்டு முதல்வர் பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதை நான் பாராட்டுகிறேன்.

    ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை மதிப்பது இல்லை. அவமானப்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்திருந்தார். இதை அவரை அவமானப்படுத்தும் செயல் ஆகும். முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம் பதவி ஏற்றதிலிருந்து மிக சிறப்பாக பணி புரிந்து வருகிறார். ஆனால் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வரும் போது ஏற்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் உணர்வோடு மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் போராட்டம் நடத்தியது பாராட்டக்குரியது. ஆனால் போராட்டம் நடத்தியவர்களை கலைப்பதற்காக போலீசார் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இந்த போராட்டத்தின் போது தேச விரோத சக்திகள் புகுந்து விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும். இந்த அறிக்கையை 2 மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம் ஆந்திரா சென்று அந்த மாநில முதல்- அமைச்சரை சந்தித்த பேசி தண்ணீரை பெற்று தந்தது போல இப்போது அவர் கேரள முதல் மந்திரியை சந்தித்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    காங்கிரஸ் கட்சிக்கு எதிர் காலம் இல்லை என பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் குஜராத் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது. இந்த வெற்றியை வெளி வர விடாமல் மோடி தடுத்து விட்டார்.

    குஜராத்தை போல பஞ்சாப், கோவா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெறும். எனவே பாரதீய ஜனதா காணாமல் போய் விடும்.

    பீட்டா அமைப்புக்கு மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தான் ஆதரவு அளித்தது என்பது தவறானது. தமிழக கலாச்சார விளையாட்டான ஜல்லிக் கட்டு நடத்த எதிர்ப்பு வரும் என்று அப்போது காங்கிரஸ் நினைக்க வில்லை. நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் ஆதரவாகவே உள்ளோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலும் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

    மதம் மற்றும் சாதியினர் பெயரால் பாரதிய ஜனதா கட்சி ஓட்டுகளை பெற முயற்சிக்கிறது. எனவே பாரதி ஜனதா கட்சியை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, சரவணன், காந்தி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறு பான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் விஜய்கண்ணா மற்றும் பாட்ஷா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×