search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் சின்னம்மா என்று அழைப்பதற்கு துரைமுருகன் ஆட்சேபம்
    X

    சட்டசபையில் சின்னம்மா என்று அழைப்பதற்கு துரைமுருகன் ஆட்சேபம்

    தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சின்னம்மா என்று அழைப்பதற்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஆட்சேபம் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அ.தி.மு.க.வினர் அம்மாவின் அரசு என்றும், அம்மாவின் ஆட்சி என்றும் கூறினார்கள். குன்னம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ராமச்சந்திரன் பேசுகையில் ‘எங்களை வழி நடத்தும் சின்னம்மாவை வணங்கி நான் பேசுகிறேன் என்றார்.

    அப்போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் (தி.மு.க) குறுக்கிட்டு சில விளக்கங்களை சபாநாயகரிடம் கேட்டார். துரை முருகன் பேசியதாவது:-

    இந்த அவையில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது மறைந்த முதல்- அமைச்சர் பெயரை சொல்லி பேசுவதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு ஒரு உறுப்பினர் சின்னம்மாவுக்கு வணக்கம் என்கிறாரே அது யார்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    (உடனே அ.தி.மு.க வினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிரிக்கத்தொடங்கினார்கள்)

    அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு பேசியதாவது:-

    அவர் அவரது கட்சி பொதுச்செயலாளரை குறிப்பிட்டு சொல்கிறார். அது பற்றி நீங்கள் எதுவும் கூறக்கூடாது. உங்கள் கட்சி தலைவர் பெயரை நீங்கள் எப்படி கூறுகிறீர்களோ அதே போல் அவரது கட்சி பொதுச்செயலாளர் பெயரை அவர் கூறுகிறார்.

    இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. உங்கள் கட்சி தலைவரை பற்றி சொல்ல உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ. அதுபோல் அவரது கட்சி பொதுச்செயலாளரை பற்றி சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. இது குறித்து மேற்கொண்டு விவாதம் கிடையாது.

    இவ்வாறு சபாநாயகர் பேசினார்.

    அதன் பிறகு பேசத் தொடங்கிய ஒவ்வொரு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் சின்னம்மாவை வணங்குவதாக கூறத்தொடங்கினார்கள்.

    மதுரை தெற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ. சரவணன் கூறுகையில், “நிரந்தர பொதுச்செயலாளர் சின்னம்மாவை வணங்குவதாக தெரிவித்து பேச தொடங்கினார்.

    இந்த விவாதத்தால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×