என் மலர்

  செய்திகள்

  துணைவேந்தர் தேர்வு குழுவில் இருந்து முருகதாஸ், பாஸ்கரனை நீக்க வேண்டும்: ராமதாஸ்
  X

  துணைவேந்தர் தேர்வு குழுவில் இருந்து முருகதாஸ், பாஸ்கரனை நீக்க வேண்டும்: ராமதாஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமராஜர்-அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு குழுவில் இருந்து முருகதாஸ், பாஸ்கரனை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சியை மட்டுமே ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களும், தேர்வும் தொடர்ந்து சர்ச்சைக்கு உரியவையாக மாறி வருகின்றன.

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் கடந்த 18.04.2015 அன்று ஓய்வு பெற்றதால், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கடந்த 06.04.2015 அன்று அமைக்கப்பட்டது. தேர்வுக்குழுவின் அமைப்பாளராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் முருகதாஸ் நியமிக்கப்பட்டார்.

  அதைத் தொடர்ந்து புதிய துணைவேந்தர் பதவிக்கு தகுதி உள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரி விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் கல்வி மற்றும் அனுபவத் தகுதிகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக இருந்தது சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட தகுதிகளுடன் புதிய விளம்பரம் வெளியிடப்பட்டது. அதிலும் பல குழப்பங்கள் இருந்த போதிலும், துணை வேந்தர் தேர்வுப் பணிகள் தொடர்ந்தன. ஆனால், தேர்வுக் குழுவின் அமைப்பாளரான முருகதாஸ் சட்டவிரோதமாக பலரின் விண்ணப்பங்களை திணித்ததற்கு தேர்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில் தேர்வுகுழுவின் முறைகேடான செயல்பாடுகளை கண்டித்து தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ராமசாமி 11.02.2016 அன்று விலகினார்.

  ஆனால், 20.12.2016 அன்று தமிழக அரசு அறிவித்த தேர்வுக்குழுவில் பேராசிரியர் முருகதாசின் பெயர் இடம் பெற்றிருந்ததுடன், அவரே அமைப்பாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஊழல் மற்றும் முறைகேடு புகாருக்கு உள்ளான ஒருவரையே துணைவேந்தர் தேர்வுக் குழுவின் அமைப்பாளராக தமிழக அரசு நியமித்ததை புரிந்து கொள்ள முடியவில்லை.

  அதேபோல், மற்றொரு பெருமை மிக்க நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பாஸ்கரனும் அப்பழுக்கற்ற கடந்த காலத்துக்கு சொந்தக்காரர் இல்லை. இவர் மீதும் ஏராளமான முறைகேடு மற்றும் ஊழல் புகார்கள் உள்ளன.

  அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், அவருக்குப் பதில் அதன் பதிவாளரான கணேசன் சசிகலாவை சந்திக்கும் குழுவில் இடம் பெற வேண்டும் என பாஸ்கரன் வாய்மொழி ஆணை பிறப்பித்துள்ளார். இதை அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் கணேசன் கடந்த 21.12.2016 தேதியிட்ட ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் உறுதி செய்திருக்கிறார்.

  இத்தகைய பின்னணி கொண்ட பாஸ்கரன் தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்படும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரும் தகுதியானவராக இருக்கமாட்டார்.

  எனவே, காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பாளர் பதவியிலிருந்து பேராசிரியர் முருகதாசையும், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வுக்குழு அமைப்பாளர் பதவியிலிருந்து பேராசிரியர் பாஸ்கரனையும் நீக்கி தமிழக ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும். அவர்களுக்கு பதிலாக அப்பழுக்கற்ற கடந்த காலத்தையும், வலிமையான கல்விப் பின்னணியையும் கொண்டவர்களை தேர்வுக் குழு அமைப்பாளர்களாக ஆளுனர் நியமிக்க வேண்டும்.

  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
  Next Story
  ×