search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

    பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் இருக்கும் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் நியமனங்களில் அதிமுக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள், குளறுபடிகள் அனைத்தும் அதிர்ச்சியளிக்கிறது.

    மாணவர்களுக்கு உயர் கல்வி அளிப்பதில் மிக முக்கிய அங்கமாகத் திகழும் பல்கலைக் கழகங்களில் அச்சமின்றி நடைபெறும் இந்த முறைகேடுகள் உயர் கல்வியின் சிறப்பையும், தரத்தையும் முற்றிலும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது. புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றிற்கு கூட துணை வேந்தர்கள் நியமிக்கப்படாதது அ.தி.மு.க. அரசுக்கு உயர்கல்வி பற்றிய அக்கறையே இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

    உலக அரங்கில் தமிழக மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் உயர் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் “உயர் கல்வியின் தரத்தை உறுதி செய்யும் தலைவர்களாக” கருதப்படும் துணை வேந்தர் பதவி நியமனங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் வெளிப்படைத்தன்மை என்பது மருந்துக்குக் கூட தென்படுவதில்லை என்பது கவலையளிக்கிறது.

    பல்கலை மாணவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பதவிகளுக்கான நியமனங்களில் யூ.ஜி.சி விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களோ, பதிவாளர்களோ யு.ஜி.சி. விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கும் போக்குத் தான் இருக்கிறது என்பது பகிரங்கமாகவே வெளிவந்திருக்கிறது.

    பத்து மாதமாக துணைவேந்தர் இல்லாமல் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்குலைந்து நிற்கிறது. படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தக்கூட அங்கு துணை வேந்தர் இல்லை.

    துணை வேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழாவை நடத்தி, டிகிரி சர்டிபிகேட்டுகளில் உயர் கல்வித்துறை செயலாளர் கையெழுத்துப் போடும் புதிய மரபை அ.தி.மு.க. அரசு புகுத்துகிறது என்று ஆளுனருக்கு புகார் அனுப்பப்பட்டு, அந்த செய்தியும் இன்று ஆங்கில நாளிதழில் விரிவாக வெளி வந்திருக்கிறது. இப்படி எந்த பத்திரிக்கையைப் புரட்டினாலும், பல்கலைக் கழகங்களில் நடக்கும் நிர்வாக குளறுபடிகள், முறைகேடுகள், ஊழல்கள் என்றுதான் செய்திகளைப் படிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல்கலைகழகங்களின் நிர்வாகம் அடியோடு சீரழிந்து நிற்கிறது என கல்வியாளர்கள் அனைவரும் கவலைப்படுகிறார்கள்.

    உலக அளவில் அங்கீகாரம் பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், சென்னை பல்கலைக் கழகத்திற்கும் துணைவேந்தரே நியமிக்கப்படாமல் இருப்பது அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

    அண்ணாப் பல்கலைக் கழக்ததிற்கு துணை வேந்தரை நியமிக்கும் “சர்ச் கமிட்டி”க்கு உறுப்பினர்களை நியமிப்பதிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முரண்பாடுகள் நிகழ்ந்திருப்பது துணை வேந்தர் நியமனத்தில் அ.தி.மு.க. அரசு “வெளிப்படைத் தன்மையை” கம்பளத்திற்கு அடியில் போட்டு மறைத்துவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

    ஆகவே ஆளுனர் “பல்கலைக்கழக வேந்தர்” என்ற முறையில் உடனடியாக தமிழகத்தில் உள்ள சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சென்னை பல்கலைக் கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம் ஆகிய பிரசித்தி பெற்ற பல்கலைக்கழங்களுக்கு உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய அனைத்திலும் நடை பெற்ற பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் நியமனங்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×