search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி, மத்திய மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்த போது எடுத்த படம்
    X
    நாராயணசாமி, மத்திய மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்த போது எடுத்த படம்

    மத்திய மந்திரி அருண்ஜெட்லியுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்திப்பு

    டெல்லி சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்தார். அப்போது புதுவைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், புதுவையை மத்திய நிதி கமி‌ஷனில் சேர்க்காததால் அதற்கான இழப்பீட்டு தொகையையும் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
    புதுச்சேரி:

    கடந்த சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக இல்லாத நாராயணசாமி முதல்-அமைச்சரானார். இதையடுத்து நெல்லித்தோப்பு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் நாராயணசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.

    எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதும் முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டார்.

    அதன்படி நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சப்தகிரி சிவக்கொழுந்து ஆகியோரும் சென்றனர்.

    டெல்லி சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கு மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற நாராயணசாமிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்தார். அப்போது புதுவைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், புதுவையை மத்திய நிதி கமி‌ஷனில் சேர்க்காததால் அதற்கான இழப்பீட்டு தொகையையும் தர வேண்டும் என்றும் அருண்ஜெட்லியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகளிடம் பேசி கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அருண்ஜெட்லி உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயலை நாராயணசாமி சந்தித்தார். அவரிடம் புதுவையில் விளையாட்டு மைதானம் அமைப்பது உள்ளிட்டவைகளுக்கு ரூ.120 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து நாளை வரை டெல்லியில் தங்கி இருக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள மேலும் பல மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

    Next Story
    ×