search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டை அனுமதிக்கவில்லை என்றால் தி.மு.க. மிகப்பெரிய போராட்டம் நடத்தும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    ஜல்லிக்கட்டை அனுமதிக்கவில்லை என்றால் தி.மு.க. மிகப்பெரிய போராட்டம் நடத்தும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

    ஜல்லிக்கட்டை அனுமதிக்கவில்லை என்றால் தி.மு.க. மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

    சென்னை:

    தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து வலையங்குளம் பெருமாள் கோவில் திடலில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏறக்குறைய 54 நாட்கள் ஆகிறது. 54 நாட்களுக்கு பிறகு அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அவரது கட்சி தோழர்களுக்கு, மன்னிக்கவும் நாட்டு மக்களுக்கு அல்ல, மூன்று தொகுதி மக்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

    ‘நான் மறு பிறவி எடுத்திருக்கிறேன்; ஆண்டவனின் கிருபையால், மக்களின் ஆசீர்வாதத்தால் நான் மறுபிறவி எடுத்திருக்கிறேன்’, என்று தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி. இதில் எந்தவித கருத்தையும் விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை.

    ஆனால், நான் கேட்கின்ற ஒரே கேள்வி, அது அவர் வெளியிட்ட அறிக்கையா? அவருடைய முழு உணர்வோடு வெளிவந்திருக்கக் கூடிய அறிக்கையா? நான் கேட்கிற கேள்வி இதுதான்.

    அவர் வெளியிட்டிருக்கக் கூடிய அறிக்கை உண்மையென்றால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இந்த அறிக்கை அவர் மூலமாகத்தான் வந்திருக்கிறதா என்பதுதான் கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது.

    அந்த அறிக்கையை வெளியிடக் கூடிய அளவிற்கு அவரது உடல்நலம் சரியாகிவிட்டது என்று சொன்னால், நியாயமாக அவர் எதைச் சொல்லி அந்த அறிக்கையை தொடங்கியிருக்க வேண்டும்.

    நாட்டில் இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் வங்கி வாசல்களில் கியூவில் நிற்கிறார்கள். இன்று இந்தியா முழுவதுமுள்ள பல முதல்-அமைச்சர்கள் அறிக்கை விடுகிறார்கள், வர வேற்கிறார்கள், விமர்சனம் செய்கிறார்கள், பிரச்சினைகளை சொல்கிறார்கள், பிரதமர் மோடிக்கு ஆலோசனை சொல்கிறார்கள், அந்தந்த மாநிலத்தில் இருக்கக் கூடிய மக்கள் போய் சந்திக்கிறார்கள்.

    மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி நேரடியாக வங்கிக்கே செல்கிறார். அங்கே க்யூவில் நிற்கும் மக்களிடத்திலே பிரச்சனைகளை கேட்கிறார். அதற்கு பிறகு அறிக்கை விடுகிறார். இப்படி, அனைத்து மாநில முதல்வர்களும் மக்களுக்கு எந்த கஷ்டமும் வந்து விடக்கூடாது என செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஆனால், மருத்துவ மனையில் இருக்கும் முதல்- அமைச்சரால் நேரில் சென்று மக்களை பார்க்க முடியாது. சரி, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மக்கள் படும் துயரம் குறித்து ஒருவரி இருக்கிறதா? இந்த கேள்வியைத்தான் நான் கேட்கிறேன்.

    அவரால் வர முடியவில்லை, அறிக்கை வெளியிட முடியவில்லை என்றால் அவருக்கு அடுத்த பொறுப்பில், முதலமைச்சர் பொறுப்புகளை கவனிக்க கவர்னரால் நியமிக்கப்பட்டிருக்கக் கூடிய ஓ.பி.எஸ் இதுகுறித்து விளக்கம் சொல்லியிருக்கிறாரா ? அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா ? அரசின் சார்பில் ஒரு செய்தியாவது வெளியிடப்பட்டிருக்கிறதா? ஆகவே தான் சொல்கிறேன் செயல்பட முடியாத நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண் டிருக்கிறது.

    இதைவிட கொடுமை என்ன வென்றால், ஜல்லிக்கட்டு. தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் இன்றைய நிலை என்ன? தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோதுகூட இந்த பிரச்சினை இருந்தது நான் மறுக்கவில்லை. ஆனால், தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் சில விதிமுறைகளை தளர்த்தி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சொன்ன விதிமுறைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு, நடத்திக் காட்டிய பெருமை நமக்கு உண்டு.

    ஆனால், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சி அந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால்தான் மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எவ்வளவு பிரச்சினைகள், போராட்டங்கள் நடந்தன. இதே அவனியாபுரத்திற்கு நான் ‘நமக்கு நாமே’ பயணத்தில் வந்தபோது ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும், அதற்காக நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவே என்ரு சொன்னேன். அதை நான் இன்னமும் மறந்துவிடவில்லை.

    ஆனால், அதற்கு பிறகு என்னானது, மத்தியில் இருக்கும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைவர் கலைஞருக்கே கடிதம் எழுதினார். “நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுவோம். அதனால், நீங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கடிதம் எழுதினார்.

    அதை ஏற்றுக்கொண்டு தலைவர் கலைஞர் அந்த போராட்டத்தை ஒத்தி வைத்தார்கள். அது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், கடைசி வரை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதா ? இல்லை. அதன் பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, அடுத்த அண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று சொன்னார்கள். கடந்த மாதம் கூட பா.ஜ.க. தலைவர் அம்மையார். தமிழிசை சவுந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும், அடுத்த பொங்கல் ஜல்லிக்கட்டோடுதான் கொண்டாடப்படும் என்று சொன்னார்கள்.

    ஆனால், நமக்கு வருகின்ற செய்திகள் என்னவென்றால், ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே. அதை எப்படி ஆதாரத்தோடு சொல்கிறேன் என்றால், வருகின்ற பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர், விவாதிக்கப்படவிருக்கக் கூடிய பிரச்சனைகள் குறித்த அஜண்டாவில், ஜல்லிக் கட்டை பற்றி குறிப்பிட வில்லை.

    மத்தியில் இருப்பவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் கவலைப்படவில்லை என்பதற்காக மாநிலத்தில் இவர்களும் அதை சிந்தித்து பார்க்கவில்லை. ஆக, நான் இங்கு அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.

    தலைவர் கலைஞரின் அனுமதியோடு சொல்கிறேன், ஜல்லிக்கட்டை அனுமதிக்கவில்லை என்றால் இங்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க கூடிய சூழல் உருவாகும்.

    அதுமட்டுமல்ல, இன்னொரு அதிர்ச்சியான செய்தி. என்னவென்றால் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் நிரைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானம். அந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறை வேற்றினோம்.

    அந்த தீர்மானத்தை இன்றைக்கு மத்திய அரசு நிராகரித்து விட்டதென்று ஒரு செய்தி வந்திருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×