என் மலர்


உருட்டு உருட்டு
வாழ்க்கையில் குடி மட்டுமே உலகம் என்று வாழும் இளைஞரின் வாழ்க்கையை கதையை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.
கதைக்களம்
நாயகன் கஜேஷ் நாகேஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். இவருக்கும் அதே ஊரில் வசிக்கும் ஒரு கும்பலுக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஒரு பிரச்சனையில் நாயகி ரித்விகா ஸ்ரேயாவை கஜேஷ் நாகேஷ் உடன் அந்த கும்பல் கோர்த்து விடுகிறார்கள். இதன் பிறகு நாயகி ரித்விகா ஸ்ரேயா, கஜேஷ் நாகேஷை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
ஆனால் கஜேஷ் நாகேஷ், ரித்விகா ஸ்ரேயா மீது எந்த வித ஈர்ப்பும் இல்லாமல் மது போதைக்கு அடிமையாகியே இருக்கிறார். கஜேஷ் நாகேஷ் பல முயற்சிகள் செய்தும் குடிப்பழக்கத்தை விடுவதாக இல்லை. மேலும் ரித்விகா ஸ்ரேயா கஜேஷ் நாகேஷை காதலிக்கும் விஷயம் பெற்றோருக்கு தெரிய வருகிறது.
இறுதியில் கஜேஷ் நாகேஷ் குடிப்பழக்கத்தை விட்டாரா? ரித்விகா ஸ்ரேயாவை திருமணம் செய்தாரா? ரித்திகா ஸ்ரேயா கஜேஷ் நாகேஷை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடிக்கிறார் குடிக்கிறார் குடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், போதையில் இருப்பது போல் இன்னும் நடித்து இருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் ரித்விகா ஸ்ரேயா, துணிச்சலான பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். கிளைமாக்சில் சபாஷ் போட வைக்கிறார்.
நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக வாழ்ந்திருக்கிறார். அவரது மூன்று பொண்டாட்டிகளாக நடித்திருக்கும் அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ஆகியோர் ரசிகர்களை குஷி படுத்தி இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
வாழ்க்கையில் குடி மட்டுமே உலகம் என்று வாழும் இளைஞரின் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம். ஆரம்பத்தில் கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே கதையை புரியவைத்து இருக்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. நல்ல கதையை தெளிவான திரைக்கதை இல்லாமல் சொதப்பி இருக்கிறார்.
இசை
அருணகிரி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கார்த்திக் கிருஷ்ணனின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
யுவராஜ் பால்ராஜின் ஒளிப்பதிவு சிறப்பு.
தயாரிப்பு
Jai Studio கிரேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









