என் மலர்


குற்றம் தவிர்
போலீஸ் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன், தனது அக்காவை கொலை செய்த கும்பலை பிடிக்கும் நாயகனின் கதை.
நாயகன் ரிஷி ரித்விக் போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவரது முயற்சிக்கு அக்கா வினோதினி பக்கபலமாக இருக்கிறார்.
டிபன் கடை நடத்தி வரும் அக்கா வினோதினிக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. ரிஷிக்கு தெரியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு கட்டத்தில் வினோதினி இறந்து விடுகிறார்.
வினோதினி இறப்பில் மாற்று அறுவை சிகிச்சை செய்து இருப்பது ரிஷிக்கு தெரிய வருகிறது. மேலும் இதுபோல் பலரை ஏமாற்றி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொன்று இருக்கிறார்கள் என்றும், இதற்கு பின்னாடி பெரிய கும்பல் இருப்பதையும் ரிஷி கண்டுபிடிக்கிறார்.
இறுதியில் நாயகன் ரிஷி அந்த கும்பலை கண்டுபிடித்தாரா? போலீஸ் ஆகவேண்டும் என்ற லட்சியம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரிஷி ரித்விக், ஆக்ஷன் நாயகனாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். குற்றங்களை தேடி கண்டுபிடிப்பது, வில்லன்களிடம் மோதுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆரத்யா, காதல், சோகம், சண்டை என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
அரசியல்வாதியாக வரும் சரவணன், ரவுடியாக வரும் சாய் தீனா, காமராஜ், சென்ட்ராயன், டாக்டராக வரும் ஆனந்த் பாபு ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. குழந்தையாக நடித்திருக்கும் சாய் சைந்தவி கவனிக்க வைத்து இருக்கிறார்.
இயக்கம்
மெடிக்கல் கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கஜேந்திரா. மருத்துவமனையில் நடக்கும் மர்ம கொலை, உடல் உறுப்புகள் திருட்டு, மாற்று அறுவை சிகிச்சை, அரசியல்வாதிகளின் ஊழல் என திரைக்கதை அமைத்து இருக்கிறார். ஏற்கனவே பார்த்த, கேட்ட கதை, அடுத்து என்ன நடக்கும் என்ற திரைக்கதை படத்திற்கு பலவீனம். இன்னும் சுவாரசியமான காட்சிகள் வைத்து இருந்தால் ரசித்து இருக்கலாம்.
இசை
ஶ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு அதிகம் கவரவில்லை.
தயாரிப்பு
பி. பாண்டுரங்கன் ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.












