என் மலர்


அந்த 7 நாட்கள்
அபூர்வ சக்தியை கொண்டு தன் காதலியின் மரணத்தை தடுக்க போராடும் கதாநாயகனின் கதை
நாயகன் அஜிதேஜ் வானியல் ஆய்வு துறையில் படித்து வருகிறார். இவருடைய தந்தை நமோ நாராயணன், அமைச்சர் பாக்யராஜின் மகளுக்கு அஜிதேஜை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால், அஜிதேஜ், வக்கீலாக பணிபுரிந்து வரும் நாயகி ஶ்ரீஸ்வேதாவை காதலித்து வருகிறார். ஒருநாள் அஜிதேஜ் சூரிய கிரகணத்தை தனது டெலஸ்கோப் மூலம் பார்க்கிறார். அதன்பிறகு அவருக்கு அபூர்வ சக்தி ஒன்று கிடைக்கிறது. இந்த சக்தி மூலம் ஒருவருடைய கண்ணை பார்த்தால், அவரது இறக்கும் நேரத்தை கணிக்கிறார். ஒரு கட்டத்தில் ஶ்ரீ ஸ்வேதாவின் கண்களை பார்க்கும் அஜிதேஜ், இன்னும் 7 நாட்களில் இறந்து விடுவார் என்று கணிக்கிறார்.
இறுதியில் நாயகி ஶ்ரீ ஸ்வேதாவின் உயிரை அஜிதேஜ் காப்பாற்றினாரா? அந்த 7 நாட்கள் எப்படி கடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அஜிதேஜ், துறுதுறு இளைஞனாக நடித்து இருக்கிறார். காதல், சோகம், அழுகை, சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஶ்ரீ ஸ்வேதா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நல்ல முயற்சி செய்து இருக்கிறார். அமைச்சர் பாக்யராஜ், அரசியல்வாதி நமோ நாராயணன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
7 நாட்களில் காதலியின் உயிரை காப்பாற்ற துடிக்கும் நாயகனின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர். முதல் பாதி திரைக்கதை அறிவியல், கிரகணம், காதல் என்று விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி ரேபிஸ், சோகம் என்று மெதுவாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். நாய் கடியால் வரும் ரேபிஸ் நோயை, தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதம் சரியாக அமையவில்லை.
ஒளிப்பதிவு
கோபிநாத் துரையின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இசை
சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
தயாரிப்பு
முரளி கபிர்தாஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.










