என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பனிக்கட்டிகளுக்கு நடுவே தற்காப்பு கலை பயிற்சி செய்யும் இளம் பெண்கள்
    X

    பனிக்கட்டிகளுக்கு நடுவே தற்காப்பு கலை பயிற்சி செய்யும் இளம் பெண்கள்

    • பனி அதிகமாக இருந்த போதிலும் பயிற்சி செய்யும் ஆர்வம் குறையவில்லை.
    • திறந்தவெளியில்தான் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

    காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் குளிர்ச்சி குடிகொண்டிருக்கும். குளிர்காலத்தில் அதன் தாக்கம் அதிகரித்து பனிக்கட்டிகளாக உருமாறும். புல்வெளிகள் மட்டுமின்றி சாலைகள், மரங்கள், வீட்டு கூரைகள் என சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பிரதேசம் போல் பளிச் வெண்மை நிறத்தில் பனித்துளிகள் படர்ந்திருக்கும்.

    தினமும் அதிகாலை உடற்பயிற்சி செய்பவர்கள் கூட குளிர் காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தடுமாறுவதுண்டு. ஆனால் காஷ்மீரில் வசிப்பவர்களிடம் குளிர், அன்றாட வாழ்வின் அங்கமாக இணைந்திருப்பதால் அதனை பொருட்படுத்தாமல் பனி சூழலிலும் சுறுசுறுப்போடு இயங்குவார்கள். இளம் பெண்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

    ஜம்மு காஷ்மீர் அடுத்த பீர்வா நகரத்தில் பனிக்கட்டிகளின் மீது வெறும் காலில் நின்றபடி இளம் பெண்கள் தற்காப்பு கலை பயிற்சிகள் செய்து அசத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

    தரையில் நிற்பது போலவே பனிக்கட்டிகள் மீது சாதாரணமாக நின்று கொண்டு ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டபடி பயிற்சி பெறுகிறார்கள். பனி அதிகமாக இருந்த போதிலும் பயிற்சி செய்யும் ஆர்வம் குறையவில்லை. இதுபற்றி பயிற்சி பெறும் சிறுமிகளில் ஒருவரான முஸ்கான் கூறுகையில், ''நாங்கள் பயிற்சி பெறுவதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. திறந்தவெளியில்தான் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

    பனிக் காலத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. அதற்காக நாங்கள் சோர்ந்து போவதில்லை. பனியிலும் கூட பயிற்சி செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். உடல் அளவிலும், மனதளவிலும் எங்களை நாங்களே வலுப்படுத்திக் கொள்கிறோம். போட்டியில் பங்கேற்று இந்தியா, காஷ்மீருக்கு பெருமை சேர்க்க விரும்புகிறோம்'' என்கிறார்.

    ''ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதை இலக்காக கொண்டிருப்பதால் பனியைக் காரணம் காட்டி ஒதுங்கி இருக்க விரும்பவில்லை'' என்பது பயிற்சி பெறும் பெண்களின் கருத்தாக இருக்கிறது.

    பனி சீசனாக இருப்பதால் அதனை பிரதானப்படுத்தி பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த குராடல் ஐன் ஜோஹ்ரா, ஐமன் ஜோஹ்ரா ஆகிய இரு சகோதரிகள் கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பனி சிற்பத்தை உருவாக்கி இருந்தனர். டெதாஸ்கோப், தடுப்பூசி, சிரஞ்ச் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு அந்த பனி சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×