search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கைகளில் மலரும் மருதாணி ஓவியங்கள்
    X

    கைகளில் மலரும் மருதாணி ஓவியங்கள்

    • சமீபத்திய டிரெண்டாக வலம் வருகிறது ‘போர்ட்ரைட் மெஹந்தி’.
    • மருதாணி ஓவியத்தில், தவறுகளை திருத்துவது கொஞ்சம் சிரமமானது.

    அழகு கலையிலும், பேஷன் உலகிலும் அடிக்கடி புது 'டிரெண்ட்' உருவாகி, பிரபலமாவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் அழகு கலையில், சமீபத்திய டிரெண்டாக வலம் வருகிறது, 'போர்ட்ரைட் மெஹந்தி'. அதாவது மருதாணியை பயன்படுத்தி, அடுத்தவர் முகத்தை தத்ரூபமாக வரைவதுதான், இன்றைய டிரெண்ட். அதில் எக்ஸ்பெர்ட்டாக திகழ்கிறார், உனாதி பட்டேல்.

    இவரது உருவ மெஹந்தி வேலைப்பாடுகள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பிரபலம். அதுபற்றிய தகவல்களை வண்ணமயமாக பகிர்ந்து கொள்கிறார். ''கொரோனா ஊரடங்கு காலகட்டம் ஒவ்வொருவருக்கும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அந்தவகையில், நான் வட இந்திய டீன் ஏஜ் பெண்களுக்கே உரித்தான, போர்ட்ரைட் மெஹந்தியை கற்றுக்கொண்டேன்.

    சிறுவயதில் இருந்தே மெஹந்தி போடுவேன் என்றாலும், போர்ட்ரைட் மெஹந்தியில் இப்போதுதான் ஆர்வம் பிறந்திருக்கிறது. யூ-டியூப், இணையதளம் வாயிலாக இந்த கலையை பயின்று, நிறைய முயற்சிகள் மேற்கொண்டு, இன்று இதில் கை தேர்ந்தவராகி இருக்கிறேன்'' என்று உற்சாகமாக ஆரம்பிக்கும் உனாதி, மகாராஷ்டிராவை சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரி. சில காலம் ஐ.டி.துறையில் பணியாற்றிவிட்டு, இப்போது புதுமையான அழகு கலைகளை முயன்று வருகிறார். அதில் போர்ட்ரைட் மெஹந்தி இவரது தனித்துவ கை வண்ணமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

    ''என்னுடைய அப்பாவிடம் இருந்து ஓவிய கலையை கற்றுக்கொண்டேன். ஆயில் பெயிண்டிங் கலையும் முயன்றிருக்கிறேன். அதன் காரணமாக, ஓவிய மாதிரியிலேயே உருவாகும் மருதாணி ஓவியத்தை மிக சுலபமாக வரைய முடிந்தது. இதுவும் ஓவியம்தான். ஆனால் வண்ணத்தூரிகைக்கு பதிலாக மெஹந்தி கோனும், காகிதத்திற்கு பதிலாக கையும் பயன்படுத்தி வரையும் தத்ரூப ஓவியம். மற்ற ஓவிய வேலைகளின்போது தவறுகளை திருத்திக் கொள்ளலாம். ஆனால் மருதாணி ஓவியத்தில், தவறுகளை திருத்துவது கொஞ்சம் சிரமமானது.

    நிறைய பழகினால் மட்டுமே, கைகளில் மருதாணி ஓவியம் வரைய முடியும்'' என்று வர்த்தக ரீதியாக பேசும் உனாதி, பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு மெஹந்தி பூசியிருக்கிறார். குறிப்பாக வட இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட திருமணங்களில், உனாதியை பார்க்கமுடியும். புதுமையான வடிவங்களில் மெஹந்தி பூசி விடுவதுடன், உலக தலைவர்களின் ஓவியங்களையும், மருதாணியில் வார்த்தெடுத்திருக்கிறார். ''கை முழுக்க மெஹந்தி வரைய 2 மணி நேரம் தேவைப்பட்டால், இதுபோன்ற ஓவியங்களை வரைய கூடுதலாக அரை மணிநேரம் தேவைப்படும்.

    வட இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் மணமகன்-மணமகள் ஓவியங்களை, கையில் மெஹந்தி ஓவியங்களாக வரையும், பழக்கமும் அதிகரித்திருக்கிறது. அதேபோல விஷேச நாட்களில், கடவுள் உருவங்களை கையில் வரையும் பழக்கமும், வரலாற்று சம்பவங்களை நினைவு கூறும் வகையிலான காட்சிகளை வரையும் டிரெண்டும் அதிகரித்திருக்கிறது. வட மாநிலங்களில் ஏற்கனவே வைரல் ஆகிவிட்ட இந்த போர்ட்ரைட் மெஹந்தி, சமீபகாலமாக தென்னிந்திய மாநிலங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக வைரல் ஆகி வருகிறது'' என்றவர்,

    வருங்காலத்தில் இந்த கலை லாபகரமான பகுதிநேர தொழிலாக மாறும் என்றும் நம்பிக்கையோடு கூறினார். ''புதிய கலை வடிவமாக இப் போது இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் போர்ட்ரைட் மெஹந்தி, வருங்காலத்தில் பெண்களுக்கான அழகு கலை தொழிலாக மாறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வட இந்திய மோகம், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், மருதாணி ஓவியங்களுக்கு வருங்காலத்தில் அதீத வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன்.

    மேக்கப் கலை, புடவை கட்டிவிடுதல் போன்ற பகுதிநேர வேலை பட்டியலில் இதுவும் பெண்களின் விருப்பமான தொழிலாக மாற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் சில நூறு ரூபாய் முதலீட்டில், பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும் என்பதால், கல்லூரி மாணவிகளிடம் அதீத வரவேற்பு பெறும். ஆனால் எல்லோராலும், இதை சுலபமாக செய்துவிடமுடியாது. கலைநயமும், பொறுமையும் இருப்பவர்களுக்கு, இந்த கலை லாபகரமான தொழிலாக மாறலாம்'' என்று நிறைவாய் பேசி முடித்த உனாதி, வருங்காலத்தில் மேலும் பல புதுமையான கலைகளை பயில ஆர்வமாய் இருக்கிறார்.

    Next Story
    ×