search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாடலீஸ்வரர் கோவிலில் எல்லை கட்டுதல் நிகழ்ச்சி: தீப்பந்தம், ஆயுதங்களுடன் வலம் வந்த பக்தர்கள்
    X

    பக்தர்கள் தீப்பந்தம், ஆயுதங்கள் ஏந்தி வலம் வந்த போது எடுத்த படம்.

    பாடலீஸ்வரர் கோவிலில் எல்லை கட்டுதல் நிகழ்ச்சி: தீப்பந்தம், ஆயுதங்களுடன் வலம் வந்த பக்தர்கள்

    • இன்று இரவு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடக்கிறது.
    • 2-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வண்ணார மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    விழாவையொட்டி நேற்று இரவு எல்லை கட்டுதல் நிகழ்ச்சி திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் நிர்வாகம், மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் நடந்தது. இதற்காக தேரடி தெரு, சன்னதி தெரு சந்திப்பில் வண்ணாரமாரியம்மன், பிடாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கிடா வெட்டி பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதையடுத்து ஏராளமான பக்தர்கள் கையில் தீப்பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியபடி லாரன்ஸ்ரோடு, வண்டிப்பாளையம் சாலை, திருவந்திபுரம் சாலை, போடிச்செட்டி தெரு சந்திப்பு ஆகிய 4 திசைகளிலும் குறிப்பிட்ட தூரம் ஓடிச்சென்று மீண்டும் தேரடி தெருவுக்கு வந்தனர்.

    பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதற்காக 4 திசைகளிலும் துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுத்து சாந்தப்படுத்துவதற்காக இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடக்கிறது. 24-ந்தேதி (புதன்கிழமை) விநாயகர் திருவிழா, 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றம், தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா, 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது. மறுநாள் நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, 5-ந்தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    Next Story
    ×