search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கம் மீது விழுந்த ஒளிக்கதிர்கள்

    • இன்று சூரிய ஒளிக்கதிர்கள் காசி விஸ்வநாதரை தனது ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்தது.
    • 3 நாட்கள் (நாளை மற்றும் நாளைமறுநாள்) சூரியோதயத்தின்போதும் இந்த வழிபாடு நடைபெறும்.

    திருச்சியை அடுத்த கல்லணை சாலை, சர்க்கார் பாளையம் கிராமத்தில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறியதாக வரலாறு கூறுகிறது.

    அப்போது, இறைவன் அவரது கனவில் தோன்றி கோவில் அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு கோவில் கட்டியதாகவும், அதனையடுத்தே கல்லணை கட்டப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்ததும், திருவாணைக் காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி அம்மன் கோவிலின் சார்பு கோவிலான, இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரியபூஜை வழிபாடு சிறப்பு வாய்ந்தது.

    வருடத்தில் வேறு எந்த நாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழும். இச்சமயத்தில் இறைவனை வழிபாடு செய்தால் திருமணத்தடை, பிணிகள் நீங்கி பல நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் ஆவணி மாதம் 7-ம் நாளான இன்று (23-ந்தேதி) காசி விஸ்வநாதர் கோவிலில் சூரிய ஒளிக்கதிர்கள் மெல்ல, மெல்ல வந்து காசி விஸ்வநாதர் மூலவரை தனது ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்தது. அதனைத்தொடர்ந்து சூரிய வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் காசிவிஸ்வநாதருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திருச்சி மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து பக்தியுடன் வழிபட்டனர்.

    3 நாட்கள் சூரியோதயத்தின்போதும் இந்த வழிபாடு நடைபெறுவதால் நாளை மற்றும் நாளை மறுதினம் கோவிலில் தங்கி வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    Next Story
    ×