search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஒடுக்கப்பட்டவர்களுக்கு புதுவாழ்வு தரும் தேவன்
    X

    ஒடுக்கப்பட்டவர்களுக்கு புதுவாழ்வு தரும் தேவன்

    • இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு சீடர்கள் உத்தரவு சொன்னார்கள்.
    • இயேசுவை சுமக்க ஆரம்பித்த போது கழுதைக்கு புது வாழ்வு வந்தது.

    மிருகங்களில் அதிகம் விரும்பப்படாதது கழுதை. யாராவது கோபத்தில் நம்மை கழுதை என்று சொல்லிவிட்டால் நம் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    ஒரு கிராமத்தில் கழுதைக்குட்டி ஒன்றை இரு வழிச்சந்தில் ஒருவன் கட்டி வைத்துவிட்டு போனான். அவன் நினைத்தான், இந்த கழுதையினால் இனி யாருக்கும் பலனில்லை. இது எப்படியாவது மரித்துப்போகட்டும் என கட்டிவைத்தான்.

    அந்த கழுதையின் நிலைமையானது, விரும்பும் இடத்திற்கு போக முடியாது, விரும்பும் ஆகாரம் சாப்பிட முடியாது, அதை பராமரிக்க யாருமில்லை, அருகில் யாரும் வர முடியாமல் நாற்றமெடுக்கும் நிலைமை.

    இன்று அநேக மனிதர்களும் இப்படி தனித்துவிடப்பட்ட நிலைமையில் தான் உள்ளனர். கழுதையின் நினைவு, என் கட்டுகளை யார் அவிழ்ப்பார்கள்? எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? மற்ற மிருகங்களை போல என் நிலை எப்போது மாறும்? என ஏங்கி நிற்கிறது. அப்படிப்பட்ட கழுதையைத் தான் இயேசு பார்த்தார், மனதுருகினார்.

    இயேசு சீடர்களை பார்த்து சொல்கிறார், "உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்" (மாற்கு 11:2). "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள். உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான்" என்று சொல்லி, அவர்களை அனுப்பி னார் (மாற்கு 11:3).

    அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள் (மாற்கு 11:4).

    அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர், நீங்கள் கழுதை குட்டியை அவிழ்க்கிறது என்னவென்று கேட்டார்கள் (மாற்கு 11:5).

    இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு சீடர்கள் உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, சீடர்களைப் போகவிட்டார்கள். (மாற்கு 11: 6)

    இயேசுவிடம் அந்த கழுதை வந்தபோது கட்டப்பட்ட நிலை மாறியது, நாற்றமெடுக்கும் நிலைமை மாறினது, கழுதைக்கு வஸ்திரங்களை போட்டார்கள், இயேசு அதன் மேல் ஏறினார். யாருக்கும் பிரயோஜனமில்லாத கழுதைதான் இயேசுவை சுமக்கும் கழுதையாய் மாறினது. அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள். வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள் (மாற்கு 11:8).

    இயேசுவை சுமக்க ஆரம்பித்த போது கழுதைக்கு புது வாழ்வு வந்தது. என்றைக்கு நீ இயேசுவை சுமக்க ஆரம்பிக்கிறாயோ? அன்று உங்களுக்கும் உயர்வு வரும்.

    பழைய ஏற்பாட்டில் ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவென்றால், கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று. கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் என்னும் தீர்க்கதரிசி கழுதையை அடித்தான் (எண்ணாகமம் 22:23).

    ஒரு தீர்க்கத்தரிசியால் பார்க்க முடியாத தூதனை யாருக்கும் வேண்டாத கழுதையால் பார்க்க முடிந்தது. உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பிலேயாமைப் பார்த்து, 'நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்?' என்றது. (எண்ணாகமம் 22:28).

    கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி, 'நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்' (எண்ணாகமம் 22:32).

    'கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று. எனக்கு நீ விலகாமல் இருந்ததனால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன்' என்றார் (எண்ணாகமம் 22:33).

    யாருக்கும் வேண்டாதவனாய் இருக்கிறேன் என கவலைப்பட வேண்டாம். இயேசுவை சுமக்க, பார்க்க, உனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை மிகப்பெரிய பாக்கியமாய் நினை. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார் (சகரியா 9:9) என்ற தீர்க்க தரிசன வார்த்தை வேதத்தில் எழுதி இருக்கிறது.

    கடவுளின் வாக்கு நிறைவேற எல்லாராலும் வெறுத்து ஒதுக்கப்படுகிற நிலைமை சில சமயங்களில் ஏற்படலாம். ஆனாலும் பொறுமையோடு காத்திரு. யாருக்கும் தேவையற்ற நீதான் இயேசுவுக்கு வேண்டும். இயேசு கழுதையின் மேல் ஏறின போது கழுதைக்கு வாழ்வு வந்தது, மதிப்பு வந்தது. உன்னுடைய வாழ்க்கையிலும் இயேசுவை சுமக்க தீர்மானித்தால் உனக்கும் நல்வாழ்வு உண்டாகும்.

    கிறிஸ்துதாஸ், ரீத்தாபுரம், கன்னியாகுமரி மாவட்டம்.

    Next Story
    ×