search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியேற்றத்தையொட்டி சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    X
    கொடியேற்றத்தையொட்டி சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    அழகர்கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி நடக்கிறது.
    அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா நேற்று காலை தொடங்கியது. அங்குள்ள தங்க கொடி மரத்தில் மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனையும் நடந்தது. அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்ம வாகன புறப்பாடும் நடைபெறும். நாளை (சனிக்கிழமை) காலையில் வழக்கம் போல் நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந் தேதி இரவு தங்க கருட வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    23-ந் தேதி காலையில் 6.45 மணிக்கு மேல் 7.30-மணிக்குள் மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜப்பெருமாள் புறப்பட்டு சென்று திரும்புகிறார். இரவு சேஷ வாகனத்திலும், 24-ந் தேதி இரவு யானை வாகனத்திலும் 25-ந் தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 26-ந் தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந் தேதி ஆடி பவுர்ணமியன்று நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்வார். பின்னர் காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படும். 28-ந் தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி ஆடி அமாவாசை அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    Next Story
    ×