என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பேரூர் பட்டீஸ்வரர் பற்றிய சிறப்பு தகவல்கள்
    X

    பேரூர் பட்டீஸ்வரர் பற்றிய சிறப்பு தகவல்கள்

    திருப்பேரூர் கொங்கு நாட்டு வைப்புதலங்களில் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பற்றிய சில அரிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
    கொங்கு நாட்டுடைய நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கியது பேரூர். இந்நாட்டை வளப்படுத்தும் முக்கிய நீர் ஆதாரங்களுள் ஒன்றாக நொய்யலாறு விளங்கியது. இந் நொய்யலாற்றின் கரையில்தான் பேரூர் அமைந்துள்ளது.

    திருப்பேரூர் கொங்கு நாட்டு வைப்புதலங்களில் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகிறது. இது பண்டைய காலத்தில் அரசவனமாக இருந்தது. இந்த வனத்தில் பெருமானார் புற்றுக்களால் சூழப்பெற்றிருந்தார். படைப்புத் தொழிலைச் செய்யும் ஆற்றலைப் பெற்ற காமதேனு இங்கு வந்து பெருமானை வழிபட்டு கொண்டிருந்தது.

    ஒரு நாள் தனது கன்றின் கால் புற்றின் உள்ளே அகப்பட்டுக் கொள்ள அதை எடுப்பதற்காக தன் கொம்புகளால் புற்றைக் குத்தி களைத் தெடுத்த போது கன்றின் கால் சுவடும் தனது கொம்பின் சுவடும் பட்டு ரத்தம் வரக்கண்டு வருந்தியது. காமதேனு தங்கி வழிபட்டதால் திருவான்பட்டியுடையார் என்ற திருப்பெயரோடு இறைவன் இங்கே வழிபடும் ஆன்மாக்களுக்கு முக்தி இன்பத்தை அருள் செய்து விளங்குகிறார். இந்த அடையாளங்கள் இன்றும் இறைவனின் திருமேனியில் காணப்படுகின்றன.



    இங்குள்ள நொய்யல் ஆற்றின் கரைக்குச் சோழன் படித்துறை என்றே பெயர் உள்ளது. இங்கு நொய்யலாற்றின் கரையில் நீத்தார் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். பேரூரிலுள்ள இறவாப்பனையும் பிறவாப்புளியும் புகழ் பெற்றவை. வடகயிலாயம் திருக்கோவிலில் உள்ள பனை மரம் என்று தோன்றியது என்று தெரியாது. இறவாப்பனை என்ற புகழ் பெற்றது.

    பட்டிப்பெருமான் கோவில் முன்புள்ள புளியமரம் பிறவாப்புளி என்ற பெயர் பெற்றது. இம்மரத்தின் விதைகள் மீண்டும் முளைப்பதில்லை.மேலும் இந்த ஊரில் சாணம் புழுப்பதில்லை. உயிர் விடுவோர்கள் தங்கள் வலது காதை மேல் வைத்தே உயிர் விடுகின்றனர். இவர்களுக்கு அம்பிகை பஞ்சாட்சர மந்திரத்தை காதில் ஓதுவதாக ஐதீகம்.

    பிரம்மா விஷ்ணு, கால முனிவர் அதிமூர்க்கம்மன் முதலானோர் இறைவனது திருக்கூத்தை கண்டு இன்புறுவதற்காக இத்தலத்தில் தவமியற்றினார்கள்.

    இவர்களுக்கு பங்குனி உத்திரத்தன்று இறைவன் தனது திருக்கூத்தை காணுமாறு செய்தார். இவர்களுக்கு அருள் செய்த திருக்கூத்து ஆண்டுதோறும் பங்குனி பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
    Next Story
    ×