என் மலர்

    ஆன்மிகம்

    சீரடி சாய்பாபாவிடம் நடத்தப்பட்ட விசாரணை
    X

    சீரடி சாய்பாபாவிடம் நடத்தப்பட்ட விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சீரடி சாய்பாபா வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    “மற்றவர்களுடன் வீணாக விவாதம் செய்யாதீர்கள் எதற்காகவும் போராட்டம் நடத்துவது போல வாதாடாதீர்கள். பிறருடன் போட்டி போடும் மனப்பான்மையை கை விடுங்கள். எப்போதும் கடவுளை நினையுங்கள். மனதில் அமைதி தேவை. அமைதியுடன் அமர்ந்து இருந்தால், உனக்குத் தேவையானதை நான் செய்வேன். உன் குறிக்கோளை நான் அடையச் செய்வேன்” என்று சீரடி சாய்பாபா அடிக்கடி மக்களிடம் சொல்வதுண்டு.

    இதை சாய்பாபா ஒரு தடவை தன் வாழ்நாளில் நடத்திக் காட்டினார். 1903-ம் ஆண்டு அதற்கான சம்பவம் நடந்தது.
    அந்த காலக் கட்டத்தில் சீரடி அருகில் உள்ள கிராமங்களில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. ஒருநாள் திருடன் ஒருவனை போலீசார் பிடித்தனர்.

    அவனை சோதனையிட்டபோது விலை உயர்ந்த தங்க, வைர நகைகள் இருந்தன. அந்த நகைகளைப் பார்த்ததும் அவற்றை அவன் எங்கோ பணக்காரர் வீட்டில் திருடி இருக்கிறான் என்பதை போலீசார் புரிந்து கொண்டனர்.

    “இந்த நகைகளை உனக்குக் கொடுத்தது யார்,” என்று அவனிடம் போலீசார் கேட்டனர். சிறிது நேரம் யோசித்த அந்த திருடன், சாய்பாபா பெயரைச் சொன்னால்தான் தப்பிக்க முடியும் என்று நினைத்தானோ என்னவோ, “சீரடி கிராமத்தில் இருக்கும் சாய்பாபாதான் எனக்கு இந்த நகைகளைக் கொடுத்தார்” என்று கூறினான்.

    இதையடுத்து போலீசார் அந்த திருடனை துலியா நகரில் உள்ள கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்கள். மாஜிஸ்திரேட் கேட்டபோதும், அவன், “எனக்கு இந்த நகைகளை சீரடி சாய்பாபா கொடுத்தார்” என்றான். உடனே மாஜிஸ்திரேட் சீரடி சாய்பாபாவை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

    தபால்காரர் அந்த சம்மனை சாய்பாபாவிடம் ஒப்படைத்தார். அதை வாங்கிப் பார்த்த சாய்பாபா சிரித்துக் கொண்டே அதை எரிந்து கொண்டிருந்த துனி நெருப்பில் போட்டு விட்டார். சம்மன் சாம்பல் ஆகிப் போனது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் கோர்ட்டில் ஆஜர் ஆகாவிட்டால் அவமதிப்பு குற்றச்சாட்டும் சேர்ந்து விடுமே, இதற்கு என்ன தீர்வு காண்பது என்று சாய்பாபாவின் தீவிர பக்தர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது நானா சந்த்ரோக்கர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதன்படி பக்தர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சென்று மாஜிஸ்திரேட்டை சந்தித்துப் பேசினார்கள். “அய்யா... சாய்பாபா மிகச் சிறந்த மகான். அவர் தெய்வப் பிறவி. நாங்கள் அனைவரும் அவரை கண்கண்ட தெய்வமாக கருதி தினமும் வழிபட்டு வருகிறோம்.

    அத்தகைய மகாத்மாவை கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரணை நடத்துவது என்பது சரியான நடைமுறையாக இருக்காது. ஒருவேளை சாய்பாபாவிடம் கண்டிப்பாக விசாரணை நடத்தியே தீர வேண்டும் என்று இந்த கோர்ட்டு கருதும் பட்சத்தில் உங்கள் சார்பில் கமிஷனர் ஒருவரை சீரடிக்கு அனுப்பி பாபாவிடம் விசாரிக்க சொல்லலாம். அதற்கு தேவையான எல்லா உதவி மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் வழங்குகிறோம்“ என்று சீரடி மக்கள் ஒருமித்த குரலில், உறுதியான குரலில் மாஜிஸ்திரேட்டிடம் கூறினார்கள்.

    சாய்பாபா மீது சீரடி மக்கள் வைத்துள்ள மாறாத நம்பிக்கையைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் ஆச்சரியப்பட்டார். சீரடி மக்களின் கோரிக்கையை அவர் உடனே ஏற்றுக் கொண்டார். சாய்பாபாவிடம் விசாரணை நடத்த நானா ஜோஷி என்ற துணை கலெக்டரை சீரடிக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்தார். நானாஜோஷி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சீரடிக்கு அன்றே வரப்போகிறார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் முக்காலத்தையும் உணர்ந்த ஞானியான சாய்பாபா அதை அறிந்திருந்தார்.

    துவாரகமாயி மசூதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். பிறகு நாற்காலி, மேஜைகளை எடுத்து வந்து போட சொன்னார். அந்த மேஜை, நாற்காலிகள் போடப்பட்டிருந்த விதம் அச்சு, அசல் அப்படியே கோர்ட்டு அறை கட்டமைப்புப் போலவே இருந்தது. முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நானா ஜோஷி சீரடி வந்தார். பாபா தங்கி இருந்த துவாரகமாயி மசூதிக்கு சென்றார். அங்கு கோர்ட்டு அமைப்பில் மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு இருப்பதை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு போனார். பிறகு அவர் நீதிபதிக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார். எதிரே பாபா அமர்ந்தார். நானாஜோஷி பாபாவைப் பார்த்து கேள்விகளைக் கேட்டார்.

    ஒவ்வொரு கேள்விக்கும் சாய்பாபா உடனே பதில் அளித்தார். மாஜிஸ்திரேட் கேட்ட கேள்விகளும் பாபா அளித்த பதில்களும் வருமாறு:-
    அதிகாரி:- உங்கள் பெயர் என்ன?
    பாபா:- எல்லாரும் என்னை சாய்பாபா என்று அழைக்கிறார்கள்.
    அதிகாரி :- சரி, உங்கள் தந்தை பெயர் என்ன?
    பாபா:- அவர் பெயரும் சாய்பாபாதான்.
    அதிகாரி:- உங்கள் குருவின் பெயர் என்ன?
    பாபா:- வெங்குசா
    அதிகாரி:- நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்?
    பாபா:- நான் கபீர் மதத்தை சேர்ந்தவன்.
    அதிகாரி:- நீங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்?
    பாபா:- நான் கடவுள் ஜாதி.
    அதிகாரி:- உங்கள் வயது என்ன?
    பாபா:- லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது.
    அதிகாரி:- இப்படி நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என்று எனக்கு வாக்குறுதி கொடுக்க முடியுமா?
    பாபா:- முடியும். இதற்கு முன்பு எந்த சந்தர்ப்பத்திலும் நான் பொய் சொன்னது இல்லை. இனியும் நான் பொய் சொல்ல மாட்டேன்.
    அதிகாரி :- குற்றம் சாட்டப்பட்டுள்ள திருடனை உங்களுக்குத் தெரியுமா?
    பாபா:- ஆமாம். எனக்கு அவனை நன்றாகத் தெரியும். எனக்கு தெரியாமல் இந்த உலகில் யாரும் இல்லை.
    அதிகாரி:- அந்த திருடன் உங்கள் பக்தன் என்று சொல்கிறான். அதோடு இந்த மசூதியில் அவன் உங்களோடு தங்கி இருந்துள்ளதாக கூறினான். அது உண்மையா?
    பாபா:- ஆமாம். எல்லாருடனும் நான் வசிக்கிறேன். எல்லாரும் எனக்கு சொந்தமானவர்கள். தெரிந்தவர்கள்தான்.
    அதிகாரி:- அவன் வைத்திருந்த வைர நகைகள் எல்லாம் நீங்கள் கொடுத்ததா?
    பாபா:- ஆமாம். நான்தான் அவனுக்கு கொடுத்தேன். இந்த உலகில் யாரும், யாருக்கும், எதையும் விட்டுக் கொடுப்பதில்லை. எனவே நான் அவனுக்கு இந்த நகைகளை கொடுத்தேன்.
    அதிகாரி:- அந்த நகைகளை நீங்கள் அவனுக்கு கொடுத்ததாக சொல்கிறீர்கள். சரி... உங்களுக்கு அந்த வைர நகைகள் எப்படி கிடைத்தன?
    பாபா:- இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் எனக்கு சொந்தமானது ஆகும். எல்லாமே எனக்குரியதுதான்.
    அதிகாரி:- இருக்கட்டும்.. ஆனால் அந்த நகைகள் திருடப்பட்டவை. அவற்றுடன் உங்களை அந்த திருடன் தொடர்புபடுத்தி இருக்கிறான்.
    பாபா:- அந்த நகைகள் எனக்கு எதற்கு? அவற்றால் எனக்கு எந்த பயனும் இல்லை. எனவே அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    பாபா இவ்வாறு கூறிய பிறகு நானாஜோஷி தொடர்ந்து விசாரணை நடத்தவில்லை. பாபாவின் ஒவ்வொரு பதிலும் அவருக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுபற்றி சிந்தித்த அவருக்கு குழப்பமே மிஞ்சியது. விசாரணை அறிக்கையில் எவ்வாறு தீர்ப்பு எழுதிக் கொடுப்பது என்ற முடிவை அவரால் எடுக்க முடியவில்லை. அதை நினைத்து அவர் தவித்துப் போனார்.

    இந்த நிலையில் சாய்பாபாவின் தினசரி குறிப்புகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது திருடன் அந்த நகைகளை பாபாவிடம் இருந்து பெற்றுக் கொண்டதாக கூறப்பட்ட தினத்தன்று, சாய்பாபா சீரடியில் இருந்தார் என்பதும் அன்று திருடன் சீரடி கிராமத்துக்கு வரவில்லை என்பதும் ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக தெரிய வந்தது.

    இதையடுத்து சாய்பாபா பற்றி அந்த திருடன் வேண்டும் என்றே தவறான தகவல்களை வெளியிட்டு இருக்கிறான் என்று அறிவிக்கப்பட்டது. அந்த திருடன் தண்டிக்கப்பட்டான். இந்த விசாரணை சம்பவம் மூலம் சாய்பாபா இந்த உலகை ஆளும் கடவுள் அவதாரம் என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு முன்பே சாய்நாதர் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி இருந்தார். சுருக்கமாக சொன்னால் சீரடி மண்ணில் தினம், தினம் அவர் மகிமை வெளிப்பட்டது. அவை கணக்கில் அடங்காதவை. மிகச் சில அற்புதங்களே வெளியில் தெரிந்தன.

    ஒரு தடவை மசூதியில் அவர் தண்ணீர் ஊற்றி விளக்கு எரித்த சம்பவம் மிகவும் வித்தியாசமானது. பாபா நடத்திய அந்த அற்புதத்தை அடுத்த வாரம் வியாழக்கிழமை விரிவாக காணலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×