search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    செவ்வாய், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா?
    X

    செவ்வாய், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா?

    • துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்று பொருள்.
    • ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.

    உலகுக்கே சக்தியாகத் திகழ்பவள் ஸ்ரீபார்வதி தேவி. சக்தி தெய்வங்களுக்கெல்லாம் தலைவி என்று உமையவளைப் புகழ்கிறது புராணம். மற்ற எல்லாப் பெண் தெய்வங்களும் பார்வதி தேவியின் அம்சம், வடிவம், அவதாரம் என்றே புராணங்கள் விவரிக்கின்றன.

    பார்வதிதேவியின் முக்கியமான வடிவங்களில் துர்காதேவியும் ஒருத்தி என்றும் பார்வதி தேவிக்கு இணையான சக்தியைக் கொண்டவள் என்றும் தேவி மகாத்மியம் விவரிக்கிறது. துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்றும் 'எவராலும் வெல்லமுடியாதவள்' என்றும் பல அர்த்தங்கள் உள்ளன.

    சக்தி மிக்க தேவியரில் துர்கா தேவியும் துர்காதேவி வழிபாடும் மிக மிக உன்னதமானவை. எல்லா நாளிலும் எந்த நேரத்திலும் துர்கையை வணங்கலாம். எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் துர்கைக்கு சிலை வடிக்கப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும் ராகுகால வேளையில் துர்கையை வழிபடுவது இன்னும் பலமும் பலனும் தரும்.

    துர்கை உக்கிர தெய்வம்தான். தீமைகளை அழிக்கவும் துர்குணங்களை நாசம் செய்யவும் துர்குணம் கொண்டவர்களை அழித்தொழிக்கவும் பிறப்பெடுத்தவள் துர்கை. அதனால்தான் ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.

    செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் துர்கை விரத வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த நாட்களில் அம்மன் விரத வழிபாடும் அம்பிகை விரத வழிபாடுமே முக்கியத்துவம் கொண்டவைதான் என்றபோதும் விரதம் இருந்து துர்கையை இந்தநாட்களில் அவசியம் வழிபட்டு வந்தால், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதிகூட இணைந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை. அதேபோல, வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் என்பது காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. இந்த நேரங்களில், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று துர்காதேவிக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வழிபடலாம். எலுமிச்சையில் தீபமேற்றி நம் பிரார்த்தனைகளைத் தெரிவிக்கலாம். துர்கையின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய கோரிக்கைகளை அவளிடம் சமர்ப்பிக்கலாம்.

    துர்கை காயத்ரி மந்திரம் :

    ஓம் காத்யாயனய வித்மஹே

    கன்யாகுமரி தீமஹி

    தந்நோ துர்கிப் ப்ரசோதயாத்

    எனும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வரலாம். அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவசியம் சொல்லி, துர்கையை தரிசிக்கலாம்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில், துர்கை சந்நிதிக்கு முன்னே அமர்ந்துகொண்டு, இந்த மந்திரத்தைச் சொல்லி, எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், நம் வாழ்வில் இதுவரை இருந்த துன்பங்கள் அனைத்தும் காணாமல் போகும். தடைகளையெல்லாம் தகர்த்தருளுவாள் தேவி. விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×