search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    நாளை சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
    X

    நாளை சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

    • பைரவருக்கு தீபமேற்றி வழிபட்டால், சொத்துப் பிரச்சினைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
    • பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும்.

    பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். சொர்ண ஆகர்ஷண பைரவரை விரதம் இருந்து தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். கடன் பிரச்சினை தீர இவரை சரணடையலாம். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர்.

    ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பத்தால் பூஜித்து வந்தால் நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும். பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

    அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்சினைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!

    தேய்பிறை அஷ்டமி நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சாத்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

    நாளை மாலை வேளையில் காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மலர் மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி காலபைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது. '

    மேற்கண்ட முறையில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவரை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் பணவரவு பன்மடங்கு அதிகரிக்கும். பிறருக்கு கொடுத்த கடன் தொகைகள் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். நீண்ட நாட்களாக உடலையும் மனதையும் வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் மந்த நிலை நீங்கி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு தீபமேற்றி வழிபட்டால், சொத்துப் பிரச்சினைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

    Next Story
    ×