search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    புண்ணியம் தரும் புரட்டாசி மாத விரதம்
    X

    புண்ணியம் தரும் புரட்டாசி மாத விரதம்

    • புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.
    • புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர்.

    புட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.

    புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

    இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளயபட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது. மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும். இப்படி தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதை உணர்ந்து, புரட்டாசியில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால் உரிய பலன்களை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.

    புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.

    புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.

    புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகா லட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா நமக்கு நமஸ்காரம்....'' என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா&சின்னம்மை தம்பதிக்கு 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ந்தேதி மகனாகப் பிறந்தார்.

    புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

    கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

    Next Story
    ×