search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    கஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை அடையச்செய்யும் கார்த்திகை சோமவார விரதம்
    X

    கஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை அடையச்செய்யும் கார்த்திகை சோமவார விரதம்

    • கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது.
    • சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

    சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்து சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

    உலகம் முழுவதும் ஒளி வீசச்செய்யக்கூடிய சந்திரனின் சாபத்தை சிவபெருமான் நிவர்த்தி செய்த தினம் ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமை ஆகும். 'க்ஷயரோகம்' என்னும் உடல் தேயும் நோய்க்கு ஆளான சந்திரன் சிவனைச் சரணடைந்து மீண்டும் வளர ஆரம்பித்த தினமே கார்த்திகை சோமவாரமாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்வர். இத்தகைய கார்த்திகை சோமவாரத்தில் நாம் சிவபெருமானை ஆராதித்து விரதம் இருந்து வழிபடுவதால் நம் வாழ்வின் கஷ்டங்கள் விலகி இஷ்டங்கள் பூர்த்தியாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் இந்துக்களிடையே புனிதமான ஒரு மாதமாகவும் பலவிரதங்களை அனுஷ்டிக்கும் மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் பல விரதங்கள் இருப்பினும் கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது. துன்பங்களை விலக்கி இன்பங்களை வழங்கக்கூடிய விரதமாக சோமவார விரதம் அமைகிறது.

    சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

    கார்த்திகை சோமாவார திருநாள்களில் சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும். கார்த்திகை சோம வார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி அன்றாட அனுஷ்டானங்களை முடித்து சிவ பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினரை அழைத்து வந்து உபசாரங்கள் செய்து அவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு தானங்கள் அளித்து ஆசி பெறுதல் வேண்டும். அன்று பகல்பொழுது உண்ணாமல் இருந்து மாலையில் சிவதரிசனம் செய்து முன்னிரவில் சிறு உணவு உண்டு உபவாசம் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு செய்ய முடியாதவர்கள் அன்று நீராடி சிவ ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை சமர்ப்பித்து வழிபடுதல் வேண்டும்.

    கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதி கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

    கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதிகம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.

    கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர். கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து மீள்வர் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×