search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பைரவரை விரதம் இருந்து வழிபட சரியான நேரம்...
    X

    பைரவரை விரதம் இருந்து வழிபட சரியான நேரம்...

    • பைரவர் வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது.
    • சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.

    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.

    இல்லங்களில் திரிசூல வழிபாடாக போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்கு பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடம் இருந்து ஆரம்பித்து அர்த்தஜாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தஜாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

    பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதை தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்திய பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. மேலும் பைரவருக்கு எட்டு வித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம்.

    அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்

    இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது. விரதம் இருந்து பைரவரை மனம் உருகி வழிபடுவர்களுக்கும், உரிய முறைப்படி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கும் இந்த சக்தி கிடைக்கும்.

    Next Story
    ×