
பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோவில் கோபுரம் மூலமாகவும் விஸ்வரூப தரிசனத்தை பெறலாம் என்ற காரணத்தை வைத்து ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற வழக்கும் இருக்கிறது. மேலும், மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை கிரகித்து, அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு பல மடங்குகளாக திருப்பித்தரும் தன்மை உண்டு என்றும் ஆன்றோர்கள் மறைபொருளாக தெரிவித்துள்ளார்கள்.
அர்த்த பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி, பகலிலும் இரவிலும் சரியாக அமைந்திருப்பதாகும். பூர்வ பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி இரவில் தொடங்கி இரவு முழுவதும் நிறைந்து பகலில் முடிவதாகும். உத்தர பூர்ணிமம் என்பது பகலில் தொடங்கி இரவில் முடிவதாகும். பாச பூர்ணிமம் என்பது பெரும்பாலான நேரம் பகல் பொழுதில் அமைந்து, இரவில் சிறிது நேரம் இருப்பதாகும்.