search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  உஹதுப் போரில் மீண்டெழுந்த முஸ்லிம்கள்
  X

  உஹதுப் போரில் மீண்டெழுந்த முஸ்லிம்கள்

  முஸ்லிம்களை எதிரிகள் சூழ்ந்ததைப் பார்த்த நபிகளார், முஸ்லிம்களைக் காப்பாற்ற தன்னுடன் சிறு படையைச் சேர்த்துக் கொண்டு எதிரிகளின் படையைத் தாக்கினார்கள்.
  உஹுதுப் போரின்போது நபிகளாரைக் காக்க வேண்டுமென்று அவர்களின் தோழர்களான அபூபக்ர்(ரலி), உமர்(ரலி), அலீ(ரலி) ஆகியோர் அங்கு விரைந்து நபிகளாரைச் சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். முஸ்லிம்களை எதிரிகள் சூழ்ந்ததைப் பார்த்த நபிகளார், முஸ்லிம்களைக் காப்பாற்ற தன்னுடன் சிறு படையைச் சேர்த்துக் கொண்டு எதிரிகளின் படையைத் தாக்கினார்கள்.

  நபிகளாரைப் பார்த்த கஅப் இப்னு மாலிக்(ரலி) மகிழ்ச்சியில் “முஸ்லிம்களே, நற்செய்தி!! அல்லாஹ்வின் தூதர் வந்துவிட்டார்கள்” என்று உரக்கக் கூறினார். எதிரிகளின் கவனம் அந்த இடத்தில் அவர்கள் மீது வரக் கூடாது என்பதற்காக, கஅபிடம் அமைதி காக்க சைகை செய்தார்கள் நபிகளார். நபிகளார் இறந்துவிட்டார்கள் என்ற தவறான செய்தியால் குழப்பத்திலிருந்த முஸ்லிம்களின் காதுகளுக்கு இன்பச் செய்தி எட்டிவிடவே அவர்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

  நபி(ஸல்) அவர்கள் எதிரிகளுடன் போராடி முஸ்லிம்களை மீட்டு மலைக் கணவாய்க்கு அழைத்து வந்து சேர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மலையை நோக்கி ஒதுங்க முயன்றபோது பலத்த காயங்களாலும் கனமான இரண்டு கவச ஆடையின் காரணத்தாலும் அவர்களால் ஏற முடியவில்லை. தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) அவர்களின் உதவியால் மேலே ஏறினார்கள்.

  நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள் அபூ தல்ஹா(ரலி). அபூ தல்ஹா(ரலி), வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெறியக் கூடியவர். அம்பெறிகையில் இரண்டு - மூன்று விற்கள் உடைந்தன. யாரேனும் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி(ஸல்) அவர்கள், 'அதை அபூ தல்ஹாவிடம் போடு' என்று சொல்லும் அளவிற்கு வில்லாற்றலுடையவர்.  நபி(ஸல்) அவர்கள் மேலேயிருந்து தலையை உயர்த்திப் போரின் நிலவரத்தையும் மக்களின் நிலையையும் எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எட்டிப் பார்க்காதீர்கள். தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்' என்று கூறினார்கள்.

  நபி முஹம்மது(ஸல்) மலைக் கணவாயில் இருந்தபோது குறைஷிகளில் ஒரு கூட்டம் மலையின் மீது ஏறி வந்து தாக்க பல முறை முயற்சித்துத் தோற்றது. நபி (ஸல்) அவர்களின் போர்த் திறமைக்கு முன் காலிதின் போர்த் திறமை தோற்றதை அறியாமல் நபிகளார் குறைஷிகளின் தாக்குதலால் இறந்திருக்கலாம் என்று உறுதியாக எண்ணிய எதிரிகள் போரை நிறுத்திக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட ஆயத்தமாகினர்.

  நபிகளாரின் மனைவி ஆயிஷா(ரலி) மற்றும் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்தனர். அவர்கள் தண்ணீர் நிரம்பிய தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு காயமுற்று வீழ்ந்து கிடக்கும் மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் ஊற்றினர்.

  முஸ்லிம் படையிலிருந்து கிட்டத்தட்ட எழுபது பேர் இறந்து கிடந்தனர். போர் இவ்வளவு கடுமையாகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்த வேளையில் அல்லாஹுத் தஆலா முஸ்லிம்களுக்கு நிம்மதியளிக்கும் பொருட்டுச் சிறு தூக்கத்தை இறக்கினான். அபூதல்ஹா (ரலி) அவர்களையும் சிறு தூக்கம் பிடித்ததால் அவர்கள் கையிலிருந்து பலமுறை வாள் வீழ்ந்தது. அவர்கள் அதனை எடுக்க அது கீழே மீண்டும் விழுந்தது.

  காலைப் பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. “அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் 'ரப்'பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்” என்ற இறை வசனமும் அருளப்பட்டது.

  ஆதாரம்: திருக்குர்ஆன் 3:144, 3:169, இப்னு ஹிஷாம், 4:62:3722, 3723, 3724, 4:63:3811, 4:64:4064, 4:64:4068

  - ஜெஸிலா பானு.
  Next Story
  ×